திருப்பூரில் பொதுமக்களுக்கு செலுத்த வேண்டிய 800-க்கும்மேற்பட்ட தடுப்பூசிகள், பின்னலாடை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, மாநகராட்சி மீது மாவட்ட சுகாதாரத் துறை குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து விசாரிக்கப்படும் என்று சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாநகரில் 17 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இங்கு ஏராளமான மக்கள் கரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அதேசமயம், நகரின் பல்வேறு இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது.
கடந்த 5-ம் தேதி மாவட்ட சுகாதாரத் துறையின் அலுவலகத்துக்கு 2000 கோவாக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளன. 5 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்றடைய வேண்டிய 800-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை, அரசு மருத்துவர்களுக்கே தெரியாமல் தனியார் பின்னலாடை நிறுவனங்களுக்கு மாநகராட்சி வழங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக மருத்துவர்கள் சிலர் கூறும்போது, “நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் அரசு மருத்துவர்களுக்கு எந்தவித தகவலும் அளிக்காமல், 800-க்கும்மேற்பட்ட தடுப்பூசிகள் பின்னலாடை நிறுவனங்களுக்கு வழங் கப்பட்டுள்ளன. மாநகரின் 5 ஆரம்பசுகாதார நிலையங்களின் பயனர் ஐடியும், கடவுச்சொல்லும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி தட்டுப்பாடு நிலவும் நிலையில், இவ்வளவு எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை மொத்தமாக எடுத்துச் சென்றுள்ளனர்.
முன்னுரிமை அடிப்படையில் தனியார் நிறுவனத் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதென்றாலும், அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் யாருமின்றி, தனியாரிடம் எப்படி மொத்தமாக தடுப்பூசிகளை மாநகராட்சி ஒப்படைக்கலாம்? இவை அனைத்தும் 18 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த வேண்டிய தடுப்பூசிகள். மாநகராட்சியின் 4-ம் மண்டலத்தில் இரண்டு மணி நேரத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டதாக கணக்கும் காண்பிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி தன்னிச்சையாக செயல்பட்டுள்ளது நியாயமற்ற செயல்” என்றனர்.
திருப்பூர் மாநகராட்சி உதவிஆணையர் கண்ணன் கூறும்போது, “பின்னலாடை நிறுவனத் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என ஆய்வுக்கூட்டத்தில் கரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் கூறியிருந்தார். அதன்படி, பெறப்பட்ட தடுப்பூசிகள், 3 நிறுவனங்களுக்கான தொழிலாளர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. பெரிய நிறுவனங்கள் மருத்துவர்களை வைத்திருப்பார்கள். தனியார் மருத்துவமனை மருத்துவர் முன்னிலையில்தான், தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. எதையும் மறைத்து செய்யவில்லை" என்றார்.
திருப்பூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் மருத்துவர் ஜெகதீஷ்குமார் கூறும்போது, “நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையமருத்துவர்களுக்கே தெரியாமல், தனியார் பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தனியார் மருத்துவமனை மருத்துவர்களை வைத்து தடுப்பூசி செலுத்தக்கூடாது. அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை வைத்துதான் தடுப்பூசி செலுத்த வேண்டுமென, அரசு எங்களுக்கு வழங்கியுள்ள வழிகாட்டும் நெறிமுறையில் உள்ளது” என்றார்.
இதுகுறித்து சுகாதார செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, “அரசுக்கு கிடைக்கக்கூடிய தடுப்பூசிகளைக் கொண்டு, முன்னுரிமை அடிப்படையில் அனைவருக்கும் வழங்குகிறோம். தனியார் நிறுவனங்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரிக்கிறேன்” என்றார்.