கேளம்பாக்கத்தை அடுத்த படூர் ஊராட்சி பொதுமக்களுக்காக தனியார் அறக்கட்டளை சார்பில், 24 மணி நேர இலவச ஆம்புலன்ஸ் சேவையை, பள்ளிக்கல்வித் துறைஅமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று தொடங்கிவைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம் படூர் கிராமப் பகுதிகளில் ‘மாற்றத்தை நோக்கி’ என்ற தனியார் அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடுவது, சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொடர்பான பணிகள் உட்பட பல்வேறுநலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு உதவும் வகையில், இந்த அறக்கட்டளை சார்பில் படூரில் 24 மணி நேர இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஆம்புலன்ஸ் சேவையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னையில் நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
மேலும், படூர் ஊராட்சி பொதுமக்கள் அவசர உதவிக்கு 8754558555 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு இலவச ஆம்புலன்ஸ் சேவையைப் பெறலாம் என அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிகழ்ச்சியில், அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் அசோக்ராசன், தலைவர் கே.ஏ.எஸ்.சுதாகர், தொண்டு நிறுவன அமைப்பின் தலைவர் செந்தூர்பாரி, படூர் தனியார் மருத்துவமனை இயக்குநர் ராஜேஷ், வழக்கறிஞர் ராஜவேலு மற்றும் அறக்கட்டளையின் நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து, மேற்கண்ட அறக்கட்டளையின் தலைவர் கே.ஏ.எஸ்.சுதாகர் கூறியதாவது: கரோனா தொற்று பரவல் உள்ள இக்கட்டான சூழ்நிலையில், இந்த இலவசசேவை ஆம்புலன்ஸ் சேவை படூர் கிராமத்தின் ஏழை, எளிய மக்களுக்கு உயிர் காக்கும் என்று நம்புகிறோம். படூர் ஊராட்சியில் வசிக்கும் அனைத்து பொது மக்களும்இச்சேவையைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.