கரோனா தொற்று பாதிப்பு குறைந்ததால் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்ட ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் மூடப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா வைரஸ் 2-வது அலைபரவத் தொடங்கியதால், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 100 படுக்கைகள் அமைக்கப்பட்டன.
தொற்று பாதிப்பு அதிகரித்ததால், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தற்காலிகமாக கரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. தனியார் பங்களிப்புடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் கூடுதலாக அமைக்கப்பட்ட ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் கொண்ட வார்டை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர் அண்மையில் திறந்து வைத்தனர். ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால் தொற்றுபாதிப்பு குறைந்து வருகிறது.
தற்போதைய நிலையில், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் 28 பேர் மட்டுமே கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகள் இல்லாததால், புதிதாக தொடங்கப்பட்ட ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சை மையம் மூடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகிகளிடம் கேட்டபோது, “கரோனா தொற்று பாதிப்புஅதிகரித்ததால் படுக்கை கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். அதனால், தற்காலிகமாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் அமைக்கப்பட்டன.
தற்போது பாதிப்பு குறைந்து வருவதாலும், நோயாளிகள் இல்லாததாலும் அந்த சிகிச்சை மையம் மூடப்பட்டுள்ளது. மையத்தில் இருந்த ஆக்சிஜன் செறிவூட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்தால் மையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்” என்றனர்.