தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் கொடைக்கானல் உள்ளிட்டப் பகுதிகளில் தொடர்மழை பெய்து அருவிகளில் நீர் கொட்டுகிறது. இதனால் மலையடிவாரத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலையில் தொடர் மழை பெய்துவருகிறது. குறிப்பாக கொடைக்கானல் மழைப்பகுதியில் பலத்த மழை பெய்துவருகிறது.
கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் 20 ம் தேதிக்கும் மேல் தாமதமாக தொடங்கியது. இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடக்கம் முதலே தென்மேற்கு பருவ மழை பெய்துவருகிறது. ஜூன் முதல் வாரத்திலேயே திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 66.61 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் முதல் வாரத்தில் பெய்த மழையை (32.3 மி.மீ)விட ஒரு மடங்கு அதிகம். கொடைக்கானல் மலைப்பகுதியில் கன மழை பெய்துவருவதால் வெள்ளிநீர்வீழ்ச்சி, பியர்சோலா அருவி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, தேவதை அருவி, எலிவால் நீர்வீழ்ச்சி ஆகிய அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதோடுமட்டுமல்லாமல் மழை நேரத்தில் மலைசரிவுகளில் புதிய புதிய அருவிகள் தோன்றி வெண்மை நிற அருவிகளாக ரம்மியமாக காட்சியளிக்கின்றன. கொடைக்கானலில் தொடர் மழை காரணமாக இதமான தட்பவெப்பநிலை நிலவும் நிலையில் சுற்றுலாபயணிகளுக்கு அனுமதியில்லாததால், ரம்மியான காட்சியை ரசிக்க சுற்றுலாபயணிகள் இல்லாதநிலை காணப்படுகிறது.
கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் சுற்றுலாபயணிகளுக்கு தடையால் இயற்கையை ரசிக்க முடியாமல் பலரும் உள்ளனர்.
அருவிகளில் நீர்வரத்தால் மலைப்பகுதிகளில் உள்ள காட்டாறுகளில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. அருவிகளில் விழும் நீர் மலையடிவாரப்பகுதிக்கு சென்று மஞ்சளாறு அணை, பாலாறு பொருந்தலாறு அணை, வரதமாநதி அணை, மருதாநதி அணை, பரப்பலாறு அணை ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்கியதால் விவசாய பணிகளையும் தொடங்க விவசாயிகள் ஆர்வமுடன் உள்ளனர்.