சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கல்வித் துறையின் குளறுபடியான அறிவிப்பால் தடுப்பூசி செலுத்த வந்த அரசு மற்றும் தனியாளர் பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றமடைந்தனர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பலர், தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஆர்வமின்றி இருந்தனர். இதையடுத்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஜூன் 20-ம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் சாக்கோட்டை வட்டாரத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்கள், காரைக்குடி சுபாஷ் நகர் பள்ளியில் இன்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என வாட்ஸ் அப் மூலம் கல்வித்துறை தகவல் அனுப்பியது.
இதையடுத்து அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அங்கு குவிந்தனர். மொத்தமே 100 தடுப்பூசிகள் மட்டுமே இருந்ததால் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனால் மற்ற ஆசிரியர்கள் ஏமாற்றமடைந்தனர். மேலும் தங்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டுமென ஆசிரியர்கள் தெரிவித்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
கல்வித்துறை அதிகாரிகள் எந்த ஆசிரியர்களுக்குத் தடுப்பூசி செலுத்துகிறோம் என முறையான அறிவிப்பு செய்யாததே இந்த குளறுபடிக்குக் காரணம் என ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.
இதேபோல் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள காலை 8 மணிக்கே ஏராளமானோர் குவிந்தனர். ஆனால் காலை 11 மணிக்கே சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பூசிகளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதுவும் 50 தடுப்பூசிகள் மட்டுமே வந்ததால் பல மணி நேரம் காத்திருந்த மக்கள், தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.