புதுச்சேரியில் தொடர்ந்து உச்சத்தில் இருந்த கரோனா தொற்று பாதிப்பு 54 நாட்களுக்குப் பிறகு 500க்குக் கீழ் குறைந்து 482 ஆகியுள்ளது. அதே நேரத்தில் உயிரிழப்புகள் தொடர்ந்து இரட்டை இலக்கத்திலேயே உள்ளன. இன்று 30 வயது இளைஞர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். ஜூன் முதல் வாரத்தில் 102 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரியில் கரோனா தொற்று ஏப்ரல் இரண்டாவது வாரத்திலிருந்து உச்சத்தைத் தொடத் தொடங்கியது. குறிப்பாக ஏப்ரல் 14இல் 413 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதன்பிறகு தொடர்ந்து தொற்றின் பாதிப்பு 500இல் தொடங்கி 2000 வரை தாண்டியது. கரோனா தொற்றின் பாதிப்பு கிட்டத்தட்ட 54 நாட்களுக்குப் பிறகு 500க்குக் கீழ் குறைந்து 482 ஆனது.
புதுச்சேரி மாநிலத்தில் நேற்று 7,731 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி – 400, காரைக்கால் – 53, ஏனாம் – 13, மாஹே – 16 பேர் என மொத்தம் 482 (6.23 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், புதுவையில் 6 பேர், காரைக்காலில் 3 பேர், ஏனாமில் ஒருவர் என 10 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 7 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள் ஆவர். இதில் 30 வயது ஆணும் ஒருவர்.
புதுச்சேரியில் தொற்று குறைந்தாலும் உயிரிழப்புகள் இரட்டை இலக்கத்திலேயே உள்ளன. ஏப்ரல், மே மாதங்களில் உயிரிழப்புகள் உச்சத்தில் இருந்தன. ஜூன் மாதம் தொடங்கி ஒரு வாரத்தில் 102 பேர் வரை உயிரிழந்துள்ளனர். புதுவை மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,638 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலம் முழுவதும் மொத்தம் 7,546 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 1,196 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
கரோனா தொற்றிலிருந்து 1 லட்சம் பேர் மீண்டனர்
புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் நேற்று கூறுகையில், "புதுச்சேரியில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. கரோனா தொற்றிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை (1,00,377) தாண்டியது. குணமடைந்தோர் சதவீதம் 91.62. பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் சரியாக அணிந்து, தனிநபர் இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடித்து, கை சுத்தம் பேணி, கரோனா தடுப்பூசியும் போட்டுக் கொண்டால் கரோனாவில் இருந்து முற்றிலும் விடுபடலாம்" என்று குறிப்பிட்டார்.