கரோனா பரவல் குறைந்து வருவதால், ஊரடங்கில் திருச்சி மாவட்டத்துக்குச் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்று சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருந்தது.
கரோனா பரவலைத் தடுக்க மே 24 முதல் ஜூன் 7 வரை முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால், அந்த நாட்களில் மருத்துவமனைக்குச் செல்லவும், மருந்து வாங்கவும், கரோனா பரிசோதனைக்காகவும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காகவுமே மக்கள் வெளியே வந்தனர்.
அப்போது பல்வேறு சாலைகளிலும் போலீஸார் தடுப்பு அமைத்து, வாகன சோதனை நடத்தி, அத்தியாவசியத் தேவையின்றி வெளியே வந்ததாகக் கண்டறியப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்ததுடன், வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில், கரோனா பரவல் குறைவாக உள்ள திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, தனியாக உள்ள பலசரக்குக் கடைகள், காய்கறி, இறைச்சி, மீன், பழம், பூ விற்பனைக் கடைகள், மின்சாரப் பொருட்கள் விற்பனைக் கடைகள், சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் மெக்கானிக் கடைகள், வாகன உதிரி பாகங்கள் விற்பனைக் கடைகள், ஹார்டுவேர் கடைகள், கல்விப் புத்தகங்கள், எழுதுபொருட்கள் விற்பனைக் கடைகள், மோட்டார் சர்வீஸ் சென்டர் ஆகியவை மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இ- பதிவுடன் வாடகை டாக்ஸியில் ஓட்டுநர் தவிர்த்து 3 பேரும், ஆட்டோவில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேரும் பயணிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகக் கடை வீதிகள் உட்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களிலும் ஏராளமான கடைகள் திறக்கப்பட்டிருந்தன. திருச்சி மாநகர் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் சாலைகளில் வாகனப் போக்குவரத்தும் அதிகமாக இருந்தது. அதேவேளையில், டீக்கடைகள் திறக்கப்படாததால், பல்வேறு இடங்களிலும் கேன் டீ விற்பனை நடைபெற்றது.
திருச்சி மாநகரில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த மீன் மார்க்கெட்டுகள் இன்று முதல் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், திருச்சி மத்தியப் பேருந்து நிலைய வளாகத்தில் இன்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை தினமும் காலை 4 மணி முதல் காலை 8 மணி வரை மீன் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.