தமிழகம்

வளிமண்டல சுழற்சி, வெப்பச் சலனத்தால் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு: வங்கக் கடலில் பலத்த காற்று வீசக்கூடும்

செய்திப்பிரிவு

வளிமண்டல சுழற்சி, வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

தமிழகத்தின் அநேக மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை முன்னேறியுள்ளது. மத்திய பிரதேசம் முதல் வட தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டல சுழற்சிநிலவுகிறது.

இதன் காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும், வரும் 7, 8-ம் தேதிகளில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், மற்ற மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 9, 10-ம் தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், மற்ற மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின்ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி ஃபாரன்ஹீட்டை ஒட்டி இருக்கும்.

6-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 19 செ.மீ., பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு பகுதியில் 9 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

8-ம் தேதி மன்னார் வளைகுடா,தெற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், 9, 10-ம் தேதிகளில் மத்திய,தெற்கு வங்கக்கடல் பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கேரளா, மாஹே, உட்புற கர்நாடகா, ராயலசீமா, லட்சத்தீவுகள், கோவா உள்ளிட்ட சில பகுதிகளிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT