தலைவாசல் அடுத்த வட சென்னிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில் மலை அடிவாரத்தையொட்டிய சாலையில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தலைவாசலை அடுத்த வடசென்னிமலையில் குன்றின் மீது அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயி லுக்கு செல்லும் மலைப்பாதையை ஒட்டிய சாலையில் சிலர் குப்பையை வீசி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் சுகாதாரமற்ற நிலையுள்ளது.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது:
கரோனா ஊரடங்கு காரணமாக சென்னிமலை கோயிலுக்கு பக்தர்கள் வருகை இல்லாததை பயன்படுத்தி, மலை அடிவாரத்தில் உள்ள சாலையோரம் சிலர் தொடர்ந்து குப்பையை கொட்டி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும், மலையில் வாழும் குரங்குகள் மற்றும் மயில்களுக்கு உணவு வழங்குவதாகக் கூறி சிலர் விற்பனையாகாத அழுகிய பழங்களையும் மலை அடிவாரத்தில் கொட்டிச் செல்கின்றனர்.
மேலும், சிலர் மலைப்பாதையில் ஆங்காங்கே அமர்ந்து மது அருந்திவிட்டு, காலி பாட்டில்களை உடைத்து வீசிச் செல்கின்றனர். இரவில் மது அருந்துவோருக்கு இடையில் தகராறு ஏற்படுவதும் அடிக்கடி நடந்து வருகிறது. இவற்றை தடுக்க காவல் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.