விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் பூபதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தருமபுரி ஆட்சியர் திவ்யதர்சினி உள்ளிட்டோர். 
தமிழகம்

காஷ்மீரில் விபத்தில் உயிரிழந்த பாலக்கோடு ராணுவ வீரரின் உடல் 42 குண்டுகள் முழங்க அடக்கம்

செய்திப்பிரிவு

காஷ்மீரில் நடந்த விபத்தில் உயிரிழந்த தருமபுரி மாவட்டம் பாலகோட்டைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடல் 42 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் கம்மாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.பூபதி (27). இவர் கடந்த 2015-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் பணியில் சேர்ந்தார். ஜம்மு காஷ்மீரில் பணிபுரிந்த நிலையில், கடந்த 4-ம் தேதி பணியில் இருந்தபோது குப்வாரா மாவட்டத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் பூபதி உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது உடல் அவரது சொந்த ஊரான கம்மாளப்பட்டி கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று கொண்டு வரப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது.

அவரது உடலுக்கு தருமபுரி ஆட்சியர் திவ்யதர்சினி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் பூபதியின் குடும்பத்தினருக்கு ஆட்சியர் ஆறுதல் கூறினார். தொடர்ந்து பூபதியின் உடலுக்கு, பெங்களூருவில் இருந்து வந்திருந்த ராணுவ வீரர்கள் குழுவினர் மரியாதை செய்தனர்.

பின்னர் அவரது உடல் அவருக்கு சொந்தமான நிலத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு 42 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இதில், தருமபுரி கோட்டாட்சியர் பிரதாப் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT