தமிழகம்

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் கரோனா நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்சிமீட்டர்: சென்னை மாநகராட்சி சார்பில் விநியோகம்

செய்திப்பிரிவு

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட கரோனா நோயாளிகள், அவர்கள் சிகிச்சை பெறும்வரை பயன்படுத்த மாநகராட்சி சார்பில் பல்ஸ் ஆக்சிமீட்டர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளைச் செய்துகொடுக்க மாநகராட்சி சார்பில் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளின் வீடுகளுக்கு நாள்தோறும் இருமுறை சென்று, அவர்களின் அடிப்படை தேவைகள் குறித்தும், உடல் நலம் குறித்தும் கேட்டறிந்து அதுகுறித்த தகவல்களை தொடர்புடைய வார்டு அல்லது மண்டல மருத்துவ குழுவினரிடம் தெரிவிப்பார்கள்.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள் மீதான கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த, அவர்களுக்கு பல்ஸ் ஆக்சிமீட்டர் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி 45 வயதுக்கு மேற்பட்ட, இணை நோயுடைய கரோனா நோயாளிகள், பல்ஸ் ஆக்சிமீட்டரை சொந்தமாக வாங்க வசதி இல்லாதவர்களுக்கு, அந்த பகுதியை சார்ந்த தன்னார்வலர்கள் மூலமாக பல்ஸ் ஆக்சிமீட்டர் வழங்கப்பட உள்ளது. இதைக் கொண்டு நோயாளிகள் நாள்தோறும் தங்கள் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை இருமுறை கண்காணித்து தன்னார்வலர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

தொற்று பாதித்த நபர் முழுவதும் குணம் அடைந்தவுடன் பல்ஸ் ஆக்சி மீட்டரை தன்னார்வலர்களிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும். ஏற்கெனவே சென்னையை சேர்ந்த தன்னார்வலர்களிடம் இருந்து இதுவரை 10,400 பல்ஸ் ஆக்சிமீட்டர்கள் நன்கொடையாக பெறப்பட்டுள்ளன. அவை, இத்திட்டத்தின் கீழ் நோயாளிகள் சிகிச்சையில் இருக்கும் வரை பயன்படுத்த வழங்கப்பட உள்ளன.

பல்ஸ் ஆக்சிமீட்டர் போன்ற உபகரணங்களை மாநகராட்சிக்கு நன்கொடையாக வழங்க விருப்பமுள்ள தன்னார்வலர்கள், மாநகராட்சியின் மாநகர நல அலுவலர் அலுவலகத்தில் 9498346492 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT