மணலூர்பேட்டையில் அமைச்சர் பொன்முடி பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். 
தமிழகம்

‘உங்கள் தொகுதியில் முதல்வர்' துறையின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.3.24 கோடிக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் பொன்முடி வழங்கினார்

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ‘உங்கள் தொகுதியில் முதல்வர்' துறையின் கீழ் ரூ.3.24 கோடிக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

மணலூர்பேட்டை பேருந்து நிலையம், சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம், கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க வளாகம் மற்றும் உளுந்தூர்பேட்டை வட் டாட்சியர் அலுவலக வளாகம் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு முதல்வரின் சிறப்பு துறையான ‘உங்கள் தொகுதியில் முதல்வர்” என்ற துறையின் கீழ் ரூ. 3,24,52,179 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி நேற்று முன்தினம் வழங்கினார். இந்நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி எம்.பி பொன்.கவுதமசிகாமணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தா. உதயசூரியன்,வசந்தம் கார்த்திகேயன் மற்றும் ஏ.ஜே.மணிகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி பேசியது:

முதல்வர் தேர்தல் பரப்புரையின் போது, பெறப்பட்ட மனுக்கள் மீது 100 நாட்களில் தீர்வு காணப்படும் என அறிவித்திருந்தார். அதனை நிறைவேற்றும் வகையில் தாம் பதவியேற்ற உடனே பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் மேற்கொள்ள ‘உங்கள் தொகு தியில் முதல்வர்” என்ற ஒரு புதிய துறையை உருவாக்கியுள்ளார்.

இத்துறைக்கு இந்திய ஆட்சிப்பணி நிலையில் ஒரு சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தையும் ஆய்வு செய்து 100 நாட்களுக்குள் நிறைவேற்றிட ஆணையிட்டார்.

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 15,880 மனுக்கள் பெறப்பட்டன.திருக்கோவிலூர், ரிஷிவந்தியம்,சங்கராபுரம், கள்ளக்குறிச்சி மற்றும் உளுந்தூர்பேட்டை ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 390 பயனாளிகளுக்கு ரூ.3,24,52,179 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட் டன.

முதல்வர் அறிவித்துள்ள அனைத்து திட்டங்களையும் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் பெற்று தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், கரோனா நோய் தொற்று காலத்தில் தகுதியுள்ள அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும்.

பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு தங்களையும் தங்களைச் சார்ந்த சமூகத்தினரையும் பாதுகாக்க வேண்டுமாறு கேட்டு க்கொள்வதாகத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT