தமிழகம்

இருவார முழு ஊரடங்கால் விற்பனையின்றி தேக்கம்: காலாவதி பொருட்கள் விற்பனைக்கு வாய்ப்பு

எல்.மோகன்

இருவார முழு ஊரடங்குக்கு பின்னர் இன்று கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், காலாவதி பொருட்கள் விற்பனைக்கு வாய்ப்புள்ளதால், சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்று, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரோனா முழு ஊரடங்கு இருவாரம் கடைபிடிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் மளிகை, காய்கறி கடைகள் திறக்கப்பட வுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை காய்கறிகள் அரசு அனுமதியுடன் வாகனங் களில் வைத்து விற்பனை செய்யப்பட்டதால், தட்டுப்பாடின்றி மக்கள் வாங்கி பயன்படுத்தி வந்தனர். ஆனால், மளிகைக் கடைகள் அடைக்கப்பட்டதால் பருப்பு, எண்ணெய், சோப்பு என பல பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று முதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலாகிறது. பகலில் காய்கறி மற்றும் மளிகை கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. காய்கனிகளை பொறுத்தவரையில் கெட்டுப்போன பொருட்கள் தெரிந்துவிடும். இதனால், மக்கள் தேங்கிய காய்கறிகளை வாங்கமாட்டார்கள். அதேநேரம் 15 நாட்களாக கடைகள் திறக்கப்படாத நிலையில், தேக்கமடைந்த தானியம் மற்றும் ரொட்டி, மிட்டாய் போன்ற உணவு பொருட்களில் பல காலாவதியாவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, காலாவதி பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என, மாவட்டம் முழுவதும் கண்காணிக்க ஆட்சியர் மா.அரவிந்த் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, “ஊரடங்கின்போது பொதுமக்கள், வியாபாரிகள் என, அனைத்து தரப்பினருமே சிரமம் அடைந்து வந்த நிலையில், தயாரித்த தேதியில் இருந்து காலாவதி நாட்களை கடந்த பொருட்கள் விற்பனையை தடுக்க பரவலாக சோதனை நடத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. அதேநேரம் பொருட்கள் வாங்கும் மக்களும் உடல் ரீதியிலான பாதிப்பை தவிர்ப்பதற்கு காலாவதி தேதியை இந்த தருணத்தில் கட்டாயம் பார்த்தே வாங்க வேண்டும்” என்றனர்.

SCROLL FOR NEXT