தடுப்பூசிகள் விநியோகிக்க தமிழக அரசு அறிவித்த உலகளாவிய டெண்டரில் யாரும் பங்கேற்காத நிலையில், மறு டெண்டர் விடப்படும் என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இது தொடர்பாக, நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஜூன் 06) செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
"தமிழ்நாடு முழுவதும் 142 இடங்களில் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, விருதுநகர் மற்றும் அரியலூர் ஆகிய 3 மாவட்டங்களில் ஆக்சிஜன் வசதியை அதிகரிப்பதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது. உதகை அரசு மருத்துவமனை வளாகத்தில் 6 கேஎல்டி ஆக்சிஜன் பிளாண்ட் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
நீலகிரியில் கரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து தொற்று இல்லாத மாவட்டம் என்ற நிலையை விரைவில் எட்டும்.
தொற்று அதிகரிப்பு அதிகமாக இருந்த சமயத்தில், 2,000 மருத்துவர்களை புதிதாக பணியமர்த்த வேண்டும், 6,000 செவிலியர்கள், 3,700 கள பணியாளர்களை புதிதாக பணியமர்த்த வேண்டும் என, மருத்துவத்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவத்துறையினர் இணைந்து பணியிடங்களை நிரப்பிக்கொள்ள தமிழ்நாடு முதல்வர் ஆணையிட்டார்.
அந்த வகையில், நீலகிரி மாவட்டத்துக்கு 30 மருத்துவர் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், நேற்று வரை 13 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 40 செவிலியர் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களும் பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு இன்று பணி ஆணை வழங்கப்படும்.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்கள் அவர்களே தடுப்பூசியை வாங்கிக்கொள்ள உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த டெண்டர் நேற்றோடு நிறைவு பெற்றது. இதில், யாரும் பங்கேற்காததால், மறு டெண்டர் விடுத்து, தடுப்பூசியை நாமே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படும் விவகாரங்கள் நேரடியாக விசாரிக்கப்படுகிறது. இதுதவிர முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றவர்கள் விவரங்களும் கேட்டறியப்படுகின்றன. குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரிக்கிறோம்.
நாள்தோறும் தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஒரு தனியார் மருத்துவமனையில் ரூ.40 ஆயிரம் பணம் கட்டியதாக புகார் வந்தது. அந்த மருத்துவமனையில் பேசி பணத்தைத் திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி 81 ஆயிரம் தடுப்பூசிகள் தமிழ்நாடு முழுவதும் இருப்பில் உள்ளது. தமிழ்நாட்டுக்கு ஜூன் மாதத்துக்கு 42 லட்சம் தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 5.50 லட்சம் வரை வந்துள்ளது. 36.5 லட்சம் தடுப்பூசிகள் இம்மாத இறுதிக்குள் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வளவு வருகிறதோ அவை உடனுக்குடன் மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பப்படுகிறது.
செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழ்நாடு அரசுக்குக் குத்தகைக்கு தர வேண்டும் என, தொழில்துறை அமைச்சர் டெல்லிக்கு சென்று சம்மந்தப்பட்ட அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. கால அவகாசம் கேட்டுள்ளனர். இதற்கிடையே, பயோடெக் நிறுவனத்தினரும் ஆய்வு செய்துள்ளனர். எனவே, இதில் நல்ல முடிவு கிடைக்கும் என காத்திருக்கிறோம்".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.