தமிழகத்தில் முதன்முறையாக விளாத்திகுளம் தொகுதி எம்எல்ஏ அலுவலகம் கரோனா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.
விளாத்திகுளம் பேருந்து நிலையம் எதிரே சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் அமைந்துள்ளது. சட்டப்பேரவை தேர்தல் முடிந்தவுடன், இந்த அலுவலகம் பொதுப்பணித் துறையால் சீரமைக்கப்பட்டு தயார் செய்யப்பட்டது. இந்நிலையில், தொகுதி மக்கள் நலன் கருதி, கரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையாக செயல்பட சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன் தனது அலுவலகத்தை சுகாதாரத் துறைக்கு வழங்கினார்.
இதனை தொடர்ந்து இன்று (ஜூன் 06) நடைபெற்ற விழாவில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு, மருத்துவமனையாக மாற்றப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைத்தார். பின்னர், அங்கு புதிதாக தொடங்கப்பட்ட கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தொடங்கி வைத்து, தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.
பின்னர், இசைமேதை ஸ்ரீ நல்லப்ப சுவாமிகள் நினைவு ஸ்தூபிக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்வதற்கான இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, விளாத்திகுளம், புதூர், எட்டயபுரம் பகுதிகளில் சலவைத் தொழிலாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளிகள் மற்றும் ஏழை எளியோருக்கு அரிசி, பருப்பு, மளிகை சாமான்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
நீட் இல்லாத நிலை உருவாகும்
பின்னர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழகத்தில் நீட் தேர்வை உள்ளிட்ட அனைத்து நுழைவு தேர்வுகளையும் ரத்து செய்வதற்காக முதல்வர் ஒரு ஆய்வு குழுவை அமைத்துள்ளார். திமுக நீட் தேர்வை எதிர்த்து வந்துள்ளது. தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதி நிச்சயமாக நிறைவேற்றுவோம். கண்டிப்பாக நீட் தேர்வு இல்லாத நிலையை முதல்வர் உருவாக்கி காட்டுவார். மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தந்துள்ள வாக்குறுதிகளையும் கண்டிப்பாக நிறைவேற்றுவார்" என்றார்.
மக்கள் பணிகளுக்கு முக்கியத்துவம்
தமிழகத்தில் கரோனா சிகிச்சைக்காக சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது குறித்து எம்எல்ஏ மார்க்கண்டேயன் கூறுகையில், "கரோனா காலக்கட்டத்தில் தொகுதி மக்களுக்கு பயன்படும் பொருட்டும் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் உள்ள இடப் பற்றாக்குறையை கருத்தில் கொண்டும் எனது சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை கரோனா சிகிச்சை மையமாக பயன்படுத்த ஒப்படைத்துள்ளேன்.
தமிழகத்தில் 5 முறை ஆட்சிப் பொறுப்பில் இருந்து மக்களுக்கு பல திட்டங்கள் தந்த கருணாநிதியின் பெயரில் மக்கள் மருத்துவமனையாக இது செயல்படும். இது ஒரு மினி மருத்துவமனையாக தொடர்ந்து செயல்படும்.
வானம் பார்த்த கரிசல் பூமியான விளாத்திகுளம் தொகுதி முழுவதும் நீர் வழித்தடங்கள் மற்றும் குளங்களை சீரமைப்பது, மரக்கன்றுகள் நடுவது, நீர் ஆதாரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகளுக்கு வரும் ஐந்தாண்டுகளில் முக்கியத்துவம் அளிக்கப்படும்" என்றார்.