திருச்சி மாவட்டத்தில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது.
வெப்பச் சலனம் காரணமாகவும் மற்றும் குமரிக் கடல், இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாகவும் மற்றும் கோவா, கர்நாடக கடலோரப் பகுதி முதல் தென் தமிழ்நாடு வரை நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாகவும், ஜூன் 9-ம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மற்றும் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று (ஜூன் 05) அறிவித்தது.
இதன்படி, திருச்சி மாவட்டத்தில் நேற்று மாலை 6.30 மணியளவில் மழை லேசாக தொடங்கி, சிறிது நேரத்தில் பலத்த மழையாக மாறியது. தொடர்ந்து, இரவு 11 மணி வரை அவ்வப்போது மிதமாகவும் மற்றும் சாலையின் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்குப் புலப்படாத அளவுக்கு பலத்த மழையும் பெய்தது. மழை நீர் வடிகால்கள், கழிவு நீர் சாக்கடைகள் மழையால் நிரம்பி வழிந்தன. சாலைகள்தோறும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த மழையால் திருச்சி மாவட்டத்தில் நேற்று பகல் முழுவதும் நிலவிய கடுமையான வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
திருச்சி மாவட்டத்தில் இன்று (ஜூன் 06) காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நவலூர் குட்டப்பட்டில் 65.4 மி.மீ. மழை பதிவாகியது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம்:
தாத்தையங்கார் பேட்டை 43, லால்குடி 42.4, துவாக்குடி 39.3, பொன்மலை 39, திருச்சி நகரம் 33, சமயபுரம் 28.2, திருச்சி விமான நிலையம் 27.8, தென்பறநாடு 26, திருச்சி ஜங்ஷன், தேவிமங்கலம் தலா 20, துறையூர் 16, கல்லக்குடி 15.2, நந்தியாறு தலைப்பு 14, பொன்னணி ஆறு அணை 13.2, வாத்தலை அணைக்கட்டு 12.6, கொப்பம்பட்டி 10, புள்ளம்பாடி 7.6, புலிவலம் 7, மணப்பாறை 5.4,மருங்காபுரி 3.2, கோவில்பட்டி 2.2.