தேர்தலில் வென்று ஒரு மாதத்துக்குப் பிறகு என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே சுமூக உடன்பாடு ஏற்பட்டது. துணை முதல்வர் பதவிக்கு முதல்வர் உடன்படாததால், முக்கிய இலாகாக்களை முதல்வர் ஒப்புதலுடன் பாஜக பெற்றுள்ளது.
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்தது. இக்கூட்டணி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார். அதே நேரத்தில், இருதரப்புக்கும் அமைச்சர்கள், சபாநாயகர் பதவிகளில் இழுபறி நீடித்தது.
பாஜக தரப்பில் சபாநாயகர், துணை முதல்வர், 2 அமைச்சர்கள் பதவி வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், ரங்கசாமி 2 அமைச்சர்கள், துணை சபாநாயகர் பதவி தருவதாக தெரிவித்தார். இதனால், அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து, பாஜக மேலிடத்திடம் முதல்வர் ரங்கசாமி நேரடியாக பேசினார். பாஜகவுக்கு சபாநாயகர், 2 அமைச்சர்கள் பதவி அளிக்க சம்மதம் தெரிவித்தார். 3 அமைச்சர்கள், துணை சபாநாயகர் பதவிகள் என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து, பாஜக தரப்பில் அமைச்சர்கள், சபாநாயகர் பதவியை யாருக்கு வழங்குவது என ஆலோசிக்கப்பட்டது.
பாஜக மேலிட பொறுப்பளார் ராஜீவ்சந்திரசேகர் எம்.பி. ஜூன் 04 அன்று புதுவைக்கு வந்து ரங்கசாமியை சந்தித்தார். அப்போது, சபாநாயகர், அமைச்சர்கள் பட்டியலை வழங்கினார். அதோடு, பாஜக அமைச்சர்களுக்கு வழங்க வேண்டிய இலாக்காக்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நியமன எம்எல்ஏ-வுக்கு சபாநாயகர் பதவி தர ரங்கசாமி மறுப்பு தெரிவித்தார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவரை சபாநாயகராக பரிந்துரை செய்ய கேட்டார். அமைச்சர்களுக்கு இலாகாக்களை தானே ஒதுக்கீடு செய்வதாக அவர் கூறினார்.
இதனால், பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. எந்த முடிவும் எட்டப்படாமல் ராஜீவ்சந்திரசேகர் எம்.பி. திரும்பிவிட்டார். இந்நிலையில், நேற்று மீண்டும் முதல்வரை சந்தித்து எம்.பி. ராஜீவ்சந்திரசேகர் பேசினார். அதில், உடன்பாடு ஏற்பட்டது.
பாஜக கொடுத்த பட்டியலில் சபாநாயகர் பதவிக்கு செல்வம், அமைச்சர்கள் பதவிக்கு நமச்சிவாயம், ஜான்குமார் பெயர் இடம் பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
என்.ஆர்.காங்கிரஸ் முக்கியத்தலைவர்களிடம் பேசுகையில், "பாஜக கோரிய துணை முதல்வர் என்ற பதவி புதுவையில் கிடையாது. எனவே, அந்த பதவியை புதிதாக உருவாக்க வேணடாம் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். அதை பாஜக தரப்பில் ஏற்றனர்.
அதனால், முக்கிய இலாகாக்களை பாஜகவுக்கு வழங்க ரங்கசாமி ஒப்புக்கொண்டார். இதனால், இருதரப்பிலும் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்தது.
என்.ஆர்.காங்கிரசுக்கு 3 அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. அமைச்சர்களை ரங்கசாமி முடிவு செய்யவில்லை. சீனியர்கள் மட்டுமில்லாமல் ஜூனியர்களுக்கும் வாய்ப்பு தர திட்டமிட்டுள்ளார். வளர்பிறையில் வரும் 14-ம் தேதி பதவியேற்பு விழா நடக்க வாய்ப்புள்ளது" என்று தெரிவிக்கின்றனர்.