சென்னையில் உள்ள மாவட்ட செயலாளர்களுடன் தனியாக ஆலோசனை நடத்திய நிலையில், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமி நேற்று சந்தித்தார்.
சட்டப்பேரவை பொதுத்தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு என்று சர்ச்சை ஏற்பட்டபோது, முன்னாள் முதல்வர்கே.பழனிசாமியே எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதன்பின், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் கே.பழனிசாமியும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வமும், பல்வேறு நிகழ்வுகள் தொடர்பாக பிரதமர் மற்றும் முதல்வருக்கு தனித்தனியாக கடிதம் எழுதி வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் கே.பழனிசாமி நேற்று முன்தினம் வந்தார். அங்குசென்னையில் உள்ள மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளுடன், மாவட்டத்தில் அதிமுகவுக்கு ஏற்பட்ட தோல்வி, கட்சி நிர்வாகப் பதவிகள் மற்றும் சசிகலா சமீபத்தில் தொண்டர்களுடன் பேசியது குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த நிகழ்வில் சென்னையில் இருந்தபோதும் ஓபிஎஸ் பங்கேற்கவில்லை. ஆலோசனை முடிவில், செய்தியாளர்களைச் சந்தித்த பழனிசாமி, கிரகப்பிரவேச நிகழ்ச்சி இருந்ததால் ஓ.பன்னீர்செல்வம் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றார்.
இதற்கிடையே, துணை முதல்வராக இருந்தபோது அரசால் வழங்கப்பட்ட பசுமை வழிச்சாலையில் உள்ள தென்பெண்ணை இல்லத்தை காலி செய்த ஓபிஎஸ், தி.நகரில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் குடியேறினார்.
துக்கம் விசாரிப்பு
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் கே.பழனிசாமி, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருடன் ஓபிஎஸ் வீட்டுக்கு நேற்று காலைசென்றார். சமீபத்தில் பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.பாலமுருகன் மறைந்த நிலையில், அவரதுமறைவு குறித்து பன்னீர்செல்வத்திடம் துக்கம் விசாரித்து, ஆறுதல் கூறினார்.
மேலும், தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்தும் இரு வரும் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.