தமிழகம்

ரவுடி சிடி மணியின் ரூ.10 கோடி மதிப்புள்ள புல்லட் புரூப் காரை தேடும் போலீஸார்

செய்திப்பிரிவு

போலீஸாரை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி சிடி மணியின் புல்லட் புரூப் காரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னையின் பிரபல ரவுடி சிடி மணி. ஆயுதங்கள் பதுக்கல், தொழில் அதிபர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் பறித்தல், போலீஸாரை துப்பாக்கியால் சுட்டது என பல வழக்குகள் இவர் மீது உள்ளன. இவரை கடந்த 2-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். கைது சம்பவத்தின் போது காயம்பட்ட சிடி மணியை போலீஸார் தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் பாதுகாப்பில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையில் சிடி மணியிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பல கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய சிடி மணிக்கு எதிரிகள் அதிகம். சில ஆண்டுகளுக்கு முன்பு கூட அவர் சென்ற கார் மீது வெடிகுண்டு வீசி கொலை முயற்சியும் நடந்தது.

இதனால் உயிர் பயத்தில் இருந்து வந்த சிடி மணி தன்னைபாதுகாத்துக்கொள்ள பல கோடிகளை செலவு செய்து பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியுள்ளார். சென்னையில் உள்ள தனது சொகுசு பங்களா முழுவதும் கண்காணிப்பு கேமராவை பொருத்தி வைத்துள்ளார். பல சொகுசு கார்களை வாங்கியவர் சாலையில் செல்லும்போது தனக்கு முன்னும்பின்னும் துப்பாக்கி ஏந்திய கூட்டாளிகளுடன் வலம் வந்துள்ளார்.

இதற்கெல்லாம் உட்சபட்சமாக ரூ.10 கோடி மதிப்பில் புல்லட் புரூப் சொகுசு கார் ஒன்றையும் வாங்கியுள்ளார். சிடி மணி, தனது குண்டு துளைக்காத காரைடெல்லியில் மறைத்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதை கண்டுபிடித்து சென்னைக்கு கொண்டு வர போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக டெல்லியில் தமிழக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சிடி மணி துப்பாக்கி தயாரிப்பிலும் ஈடுப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதற்காக மதுரையில் ஒதுக்குப்புறமாக உள்ள பல ஏக்கர் தென்னந்தோப்பை வாங்கி, சட்ட விரோத செயல்களில் ஈடுப்பட்டதையும் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

SCROLL FOR NEXT