சிவகங்கை நகராட்சி மயானத்தில் உறவினர்கள் வாங்க முன்வராததால் தேங்கியுள்ள இறந்தவர்களின் அஸ்திகள். 
தமிழகம்

உறவினர்கள் வாங்க முன்வராததால் சிவகங்கை மயானத்தில் தேங்கி கிடக்கும் அஸ்திகள்

செய்திப்பிரிவு

சிவகங்கையில் கரோனா அச்சத்தால் தகனம் செய்த உடல்களின் அஸ்தியைக் கூட உறவினர்கள் வாங்க முன்வராததால், நகராட்சி மயானத்தில் அஸ்திகள் தேங்கி வருகின்றன.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று மற்றும் நுரையீரல் தொற்றால் பாதிக் கப்பட்ட 700-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். தினமும் 20-க்கும் மேற்பட்டோர் கரோனா மற்றும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட காரணங்களால் உயிரிழக் கின்றனர். ஒரு சிலர் மட்டும் சொந்த ஊர்களுக்கு உடல்களை ஆம்புலன்ஸ்களில் கொண்டு சென்று அடக்கம் செய்கின்றனர்.

பெரும்பாலானோர் மருத்துவமனை அருகே உள்ள நகராட்சி எரிவாயு தகன மேடையில் இறந்தவர்களின் உடல்களை எரியூட்டுகின்றனர். தினமும் இங்கு குறைந்தது 10-க்கும் மேற்பட்ட உடல்கள் எரியூட்டப்படுகின்றன. உடல்கள் எரிந்ததும், அன்றோ அல்லது மறுநாளோ உறவினர்களிடம் அஸ்தி ஒப்படைக்கப்படுகிறது. அதை உறவினர்கள் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் கரைப்பர். கரோனா அச்சத்தால் சிலர், தங்கள் உறவினர்கள் உடல்களை எரியூட்டும் ஊழியர்களிடமே தந்து விட்டு சென்று விடுகின்றனர். இதை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் ஊழியர்கள் திணறி வருகிறார்கள்.

இதனால் மயானத்தில் அஸ்திகள் தேங்கி வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் 20 அஸ்திகள் வாங்கப்படாமல் உள்ளன. அவற்றை எரியூட்டும் ஊழியர்கள் பாதுகாத்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT