வந்தவாசியில் செயல்பட்டு வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை சூறையாடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரம் கோலாபாடியார் தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஊரடங்கு காரணமாக, கடந்த சில நாட்களாக அலுவலகம் திறக்கப்படவில்லை.
இந்நிலையில், அலுவலகத்தை திறக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று முன் தினம் மாலை சென்றுள்ளனர். அலுவலகத்தை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது மேஜை, நாற்காலி, மின்விளக்கு உள்ளிட்ட மின் சாதன பொருட்கள் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டு இருப் பதை கண்டு அதிர்ச்சி அடைந் துள்ளனர்.
மேலும், அலுவலகத்தில் இருந்த 3 பீரோக்கள் திறக்கப்பட்டிருந்தன. அதில் இருந்த ஆவணங்கள் மற்றும் துண்டறிக்கைகளை வெளியே எடுத்து போட்டு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. பீரோவில் இருந்த ரூ.4 ஆயிரம் பணத்தையும் காணவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் உள்ளே புகுந்தவர்கள், பொருட்களை சூறையாடிவிட்டு பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த வந்தவாசி துணை காவல் கண்காணிப்பாளர் தங்கராமன் தலைமையிலான காவல் துறை யினர் நேரில் சென்று பார்வையிட் டனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரத் தலைவர் சிவராமன் கொடுத்த புகாரின் பேரில், அலுவலகத்தை சூறையாடிய நபர்களை வந்தவாசி தெற்கு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் எம்.சிவக்குமார் கூறும்போது, “வந்தவாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார அலுவலகம் செயல்படுகிறது. வந்தவாசி பகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வருகிறோம். கட்சி அலுவலகம் கடந்த 1-ம் தேதி திறக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, 4-ம் தேதிதான் கட்சியினர் சென்றுள்ளனர். இந்த இடைப்பட்ட காலத்தில் அலுவலகம் சூறையாடப் பட்டுள்ளது.
மேலும், பீரோவில் இருந்த ஆவணங்கள் மற்றும் துண்டறிக்கைகளை எரித்துள்ளனர். நிதி வசூல் பணம் ரூ.4 ஆயிரத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இயக்கம் தொடர்ந்து போராடி வருகிறது. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் யார்? என தெரியவில்லை. இது குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி மார்க்சிஸ்ட் கம்யூன்ஸிட் கட்சி அலுவலகத்தை சூறையாடிவர்களை கைது செய்ய வேண்டும்” என்றார்.