தமிழகம்

நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்க: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

செய்திப்பிரிவு

கரோனா பெருந்தொற்று காரணமாக பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ததுபோல், நீட் உள்ளிட்ட அனைத்து தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தின் விவரம்:

''கடந்த 4-ம் தேதியன்று, சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாகக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசைப் பொறுத்தவரை 12-ம் வகுப்புத் தேர்வுகளின் அடிப்படையிலேயே உயர்கல்வி வாய்ப்பினை மாணவர்கள் பெற வேண்டும் என்பதில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும், தற்போதைய சூழலைக் கருதி நாங்களும் இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறோம்.

இங்கேயும், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் தொழில்முறை, கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அந்த மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெறும். இந்த முடிவு மாணவர்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில், மாணவர்களுக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை நடத்துவது என்பது அவர்களின் உடல்நலத்துக்கு ஊறு விளைவிப்பதாக அமையும். எந்தக் காரணத்துக்காக நாடு முழுவதும் பிளஸ் 2 தேர்வை ஒத்திவைத்திருக்கிறோமோ, அதே காரணம் நீட் உள்ளிட்ட அனைத்து தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்வதற்கும் பொருந்தும்.

தமிழகம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழில்முறைக் கல்வியிலும் மாணவர் சேர்க்கையை பிளஸ் 2 அடிப்படையிலேயே நடத்த அனுமதிக்க வேண்டும்.

எனது கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்து இதில் தமிழகத்துக்கு சாதகமாக முடிவெடுப்பீர்கள் என உறுதியாக நம்புகிறேன்''.

இவ்வாறு பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT