தமிழகம்

தூத்துக்குடி, கோவில்பட்டியில் பச்சிளங் குழந்தைகளுக்கு கரோனா தொற்று

எஸ்.கோமதி விநாயகம்

தூத்துக்குடி, கோவில்பட்டியில் பச்சிளங் குழந்தைகள் 2 பேர் கரோனா நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

தூத்துக்குடி டேவிஸ்புரத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கடந்த 29-ம் தேதி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், அந்தப் பெண்ணுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குழந்தைக்கு மேற்கொண்ட பரிசோதனையில், குழந்தைக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து பச்சிளங்குழந்தை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளது.

இதேபோல், கோவில்பட்டி அருகே இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கடந்த மாதம் 7-ம் தேதி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

சில நாட்களுக்குப் பின்னர், அந்த பெண் குழந்தையுடன் இடைசெவலில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றார். இதற்கிடையே அந்தப் பெண்ணின் தந்தைக்கு லேசான காய்ச்சல் அறிகுறி தென்படவே, அவர் கரோனா பரிசோதனை செய்துள்ளார்.

இதில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதையடுத்து வீட்டில் உள்ளவர்களுக்கு வில்லிசேரி ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் கடந்த 2-ம் தேதி கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், பிறந்து 27 நாட்களே ஆன ஆண் குழந்தைக்கு மட்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு கரோனா தொற்று இல்லை.

இதையடுத்து பச்சிளங்குழந்தையை வீட்டிலேயே தனிமைப்படுத்தி, தினமும் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் சென்று பரிசோதித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT