தமிழகம்

மேலூர் ஒரு போக பாசனத்துக்கு பெரியாறு அணையை திறக்க போராடிய விவசாயிகள் மீதான வழக்கு ரத்து

கி.மகாராஜன்

மேலூர் ஒரு போக பாசனத்துக்காக முல்லை பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கக்கோரி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூரில் பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து ஒரு போக விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கக்கோரி மதுரை to சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 2017-ல் விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமாக விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இப்போராட்டம் தொடர்பாக விவசாயிகள் சங்கச் செயலர் முருகன், வழக்கறிஞர்கள் ஸ்டாலின், அமலன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மீது மேலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் மேலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் அமலன், உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்து நீதிபதி ஜி.இளங்கோவன் பிறப்பித்த உத்தரவு:

விவசாயிகள் விவசாயத்துக்கு தேவையான தண்ணீரை அணையிலிருந்து திறக்கக்கோரி போராட்டம் நடத்தியுள்ளனர். இதை சட்டவிரோத போராட்டம் என்று கூற முடியாது. போராட்டத்தின் போது விவசாயிகள் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக வழக்கில் கூறப்பட்டுள்ளது.

அதற்கான ஆதாரங்களை போலீஸார் தாக்கல் செய்யவில்லை. எனவே, தண்ணீர் திறக்கக்கோரி போராட்டம் நடத்திய மேலூர் விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT