செம்மொழியான தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.ஆயிரம் கோடி ஒதுக்கக்கோரி தாக்கலான மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி கடம்பூரைச் சேர்ந்த செல்வகுமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
இந்தியாவில் செம்மொழியாக தேர்வு செய்யப்பட்ட 6 மொழிகளில் பழமையானது தமிழ் மொழி தான். ஆனால் தமிழ் மொழி வளர்ச்சிக்கு கடந்த 3 ஆண்டுகளாக ரூ.22.94 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மிகவும் குறைந்தளவே பயன்பாட்டில் உள்ள சமஸ்கிருத மொழிக்கு 3 ஆண்டுகளில் ரூ.643.85 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியை விட சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு 22 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே, செம்மொழி தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ரூ.ஆயிரம் கோடி ஒதுக்கவும், சென்னையில் உள்ள மத்திய செம்மொழி கல்வி நிறுவனத்தை நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாற்றவும், இந்தியா முழுவதும் செம்மொழியான தமிழை கற்பிக்க கல்வி நிறுவனங்கள் தொடங்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 18-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.