தமிழகம்

கரோனா தடுப்பில் அரசுக்கு ஆலோசனை வழங்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் தலைமையில் குழு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தடுப்புப்பணியில் அரசுக்கு ஆலோசனைகள் வழங்குவதற்காக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பூர்ணலிங்கம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அரசாணையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கரோனா தொற்று குறித்து ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பூர்ணலிங்கம் தலைமையில் பணிக்குழுஒன்றை அமைக்க உத்தரவிட்டுள்ளார். இக்குழு, முதல்வர் தலைமையிலான கரோனா தடுப்பு மேலாண்மை நிபுணர் குழுவுக்கு தேவையான உதவிகளை செய்யும். இக்குழுவில் அரசு சாரா, அலுவல் சார்ந்த 13 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.

குறிப்பாக, அரசு சாரா உறுப்பினர்களாக டாக்டர் பி.குகானந்தம், டாக்டர் குழந்தைசாமி, சென்னைதேசிய தொற்றுநோய் ஆய்வு நிறுவன இயக்குநர் மனோஜ் முரேகர்,வேலூர் சிஎம்சி மருத்துவமனையின் தொற்றுநோய் நிபுணர்ஜெயபிரகாஷ் முலியில் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அரசு தரப்பில், மருத்துவத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சிறப்புப் பணி அதிகாரி செந்தில்குமார், மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்குநர், பொது சுகாதார இயக்குநர், தேசியசுகாதார இயக்க திட்ட இயக்குநர், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக மேலாண் இயக்குநர், தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வுக் கழக தலைவர் ஆகியோர்உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

குழுவின் உறுப்பினர் - செயலராக மருத்துவத் துறை இணை செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழுவினர் அவ்வப்போது கூடி ஆலோசிப்பதுடன், கரோனா தடுப்புக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளையும் கண்காணிப்பார்கள். தேவைப்பட்டால் கூடுதல்உறுப்பினர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT