சென்னையில் தக்காளி விலை திடீரென குறைந்துள்ளது. கோயம் பேடு மார்க்கெட்டில் நேற்று கிலோ ரூ.25-க்கு விற்பனை செய்யப் பட்டது.
தமிழகத்துக்கு ஓசூர், கிருஷ்ணகிரி மற்றும் தமிழக எல்லையில் உள்ள ஆந்திர மாநிலப் பகுதிகளில் இருந்து அதிக அளவில் தக்காளி வருகிறது. இப்பகுதிகளில் இம்மாதம் 2 மற்றும் 3-வது வாரத்தில் பெய்த கனமழையால் பூக்கள் உதிர்வு, பூக்கள் உருவாகாமை, பழங்களை பறிக்க தோட்டத்துக்குள் செல்ல முடியாத நிலை போன்ற காரணங்களால் தக்காளி வரத்து குறைந்தது. அதனால் கடந்த 16-ம் தேதி அதிகபட்சமாக கோயம் பேட்டில் கிலோ ரூ.70-க்கும், வெளி சந்தையில் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலையை கட்டுக்குள் வைக்கும் விதமாக தமிழக அரசு, சென்னையில் 50 இடங்களில் தற்காலிக பண்ணை பசுமை கடைகளைத் திறந்தது. இக்கடைகள் மற்றும் ஏற்கெனவே சென்னையில் இயங்கி வரும் 42 பண்ணை பசுமைக் கடைகள் உட்பட அனைத்திலும் தக்காளி கிலோ ரூ.43-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது திடீரென கிலோ ரூ.25 ஆக குறைந்துள்ளது.
இது குறித்து கோயம்பேடு மார்க்கெட் தக்காளி வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.தியாகராஜன் கூறும்போது,
“கனமழையின்போது தக்காளி வரத்து குறைந்து தினமும் 30 லோடுகள் மட்டுமே வந்தன. அதனால் விலை அதிகரித்தது. கடந்த ஒரு வாரமாக மழை நின்று, வெயில் காய்ந்ததால், கிருஷ்ணகிரி மற்றும் ஆந்திர மாநிலப் பகுதிகளில் இருந்து தினமும் 60-க்கும் மேற்பட்ட லோடுகள் தக்காளி வருவதால் விலை சரிந்துள்ளது. இப்போது கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோ ரூ.25-க்கு விற்கப்படுகிறது” என்றார்.
நேற்றைய நிலவரப்படி பண்ணை பசுமை கடைகளில் தக்காளி கிலோ ரூ.25, ஜாம்பஜாரில் ரூ.25, வியாசர்பாடியில் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது.