கோப்புப் படம் 
தமிழகம்

ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு 960 மதுபாட்டில்கள் கடத்தல்: சரக்கு வேனில் எடுத்து வந்த 3 பேர் கைது

செய்திப்பிரிவு

ஆந்திராவிலிருந்து, தமிழகத்துக்கு சிறிய சரக்கு வேனில் 960 மதுபாட்டில்களை கடத்தியது தொடர்பாக சென்னையை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் தற்போது தளர்வற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஆகவே, திருவள்ளூர் மாவட்டத்தை ஒட்டியுள்ள ஆந்திர மாநிலப் பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகளுக்கு திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சிலர் மோட்டார் சைக்கிள்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் சென்று மதுபாட்டில்களை வாங்கி, அங்கிருந்து தமிழகத்துக்கு கடத்தி வந்து, பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர். இதைத் தடுக்க போலீஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திராவிலி ருந்து, தமிழகத்துக்கு வாகனம் ஒன்றில் மதுபாட்டில்கள் கடத்தப்பட்டு வருவதாக பொன்னேரி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி தலைமையிலான போலீஸார், மீஞ்சூர் ரயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

மாம்பழ மூட்டைகளில்..

அப்போது, ஆந்திர பகுதியிலிருந்து வந்த சிறிய சரக்கு வேனில், மாம்பழ மூட்டைகளுக்கு அடியில் ரூ.2 லட்சம் மதிப்பிலான, 960 மதுபாட்டில்கள் மறைத்து வைத்து தமிழகத்துக்கு கடத்தப்பட்டது தெரியவந்தது.

அந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸார், இதுதொடர்பாக சென்னை அம்பத்தூர், சண்முகபுரம், புதூர் பகுதிகளைச் சேர்ந்த முருகன்(34), ஐசக்(36), நாகராஜ்(38) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT