திருநெல்வேலியிலிருந்து கமுதி வழியாக மானாமதுரைக்கு நடந்து சென்ற கழைக்கூத்தாடிகள். 
தமிழகம்

நெல்லையிலிருந்து மானாமதுரைக்கு நிவாரண நிதி பெற 200 கி.மீ. தூரம் நடந்து சென்ற கழைக்கூத்தாடிகள்

செய்திப்பிரிவு

மானாமதுரையைச் சேர்ந்த கழைக்கூத்தாடிகள் கரோனா நிவாரண நிதி பெற திருநெல்வேலி யிலிருந்து சொந்த ஊருக்கு 200 கி.மீ. தூரம் நடைப்பயணமாக சென்றனர்.

சிவகங்கை மாவட்டம், மானா மதுரையில் கழைக்கூத்து மூலம் பிழைப்பு நடத்தும் ஏராளமான குடும்பங்கள் வசிக்கின்றன. இதில் 4 குடும்பங்களைச் சேர்ந்தோர், கடந்த ஏப்ரலில் ராமநாதபுரம் மாவட்டம் வழியாக தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்குச் சென்றனர். கிராமங்களில் கலைநிகழ்ச்சிகள் நடத்தி வந்தனர். கடைசியாக திருநெல்வேலி மாவட்டத்தில் தங்கியிருந்தபோது, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வாழ்வாதாரம் இன்றி தவித்த இக்கழைக்கூத்தாடிகள், அரசு அறிவித்த கரோனா நிவாரண நிதி ரூ.4,000 மற்றும் 14 வகை மளிகைப் பொருட்களை பெற்றாவது வாழ்க்கை நடத்தலாம் என சொந்த ஊருக்குப் புறப்பட்டனர்.

இவர்களில் மூன்று குடும்பத் தினர் மாடு பூட்டிய வண்டிகளில் சென்றனர். ஆனால், ஒரு குடும்பத்தினர் மட்டும் மாடு இல்லாமல் நெல்லையிலிருந்து மானாமதுரைக்கு 200 கி.மீ. தூரம் அவர்களே வண்டியை இழுத்துச் சென்றனர்.

கழைக்கூத்துக்குப் பயன் படுத்தப்படும் பொருட்கள் ஏற்றப்பட்ட மாட்டு வண்டியுடன் நேற்று கமுதி சாலையில் சென்ற கண்ணம்மா என்பவர் கூறியதாவது: ஊரடங்கால் திருநெல்வேலியில் கழைக்கூத்து நடத்த முடியாமல் உணவின்றி சிரமப்பட்டோம். அதனால் அரசு அறிவித்த கரோனா நிவாரண நிதி மற்றும் பொருட்களை வாங்கி யாவது பிழைப்பு நடத்தலாம் என சொந்த ஊரான மானா மதுரைக்குத் திரும்புகிறோம். எங்கள் வண்டியின் மாடு இறந்து விட்டது. மாடு வாங்க எங்களிடம் பணம் இல்லை. அதனால் நாங்களே வண்டியை இழுத்துச் செல்கிறோம் என்று கூறினார்.

SCROLL FOR NEXT