சென்னை உயர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்ற கிளைக்கு வரும் 23-ம் தேதி முதல் ஜனவரி 3-ம் தேதி வரை 12 நாட்கள் கிறிஸ்துமஸ் விடுமுறை விடப்படுகிறது.
இந்த காலத்தில் அவசர வழக்குகளை விசாரிப்பதற்காக சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றத்தில் டிசம்பர் 28-ம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1.30 மணி வரை மனுதாக்கல் செய்யலாம். டிசம்பர் 29-ம் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 4.45 மணி வரை வழக்குகள் விசாரிக்கப்படும்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு, அவசர வழக்குகளை விசாரிக்கும். பின்னர், இந்த நீதிபதிகள் தனி நீதிபதிகளாக அமர்ந்தும் வழக்குகளை விசாரிப்பார்கள்.
அதுபோல, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் நீதிபதிகள் கே.ரவிச்சந்திரபாபு, ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் கொண்ட அமர்வு, அவசர வழக்குகளை விசாரிக்கும். பின்னர், இந்த நீதிபதிகள் தனி நீதிபதிகளாக அமர்ந்தும் வழக்குகளை விசாரிப்பார்கள்.
உயர் நீதிமன்ற பதிவுத்துறை கிறிஸ்துமஸ் விடுமுறையின் அனைத்து நாட்களும் காலை 10 மணி முதல் மாலை 4.45 மணி வரை செயல்படும். அவசர வழக்குகள் விசாரிக்கப்படும் டிச.29-ம் தேதி மட்டும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை செயல்படும் என்று உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பி.கலையரசன் நேற்றிரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.