டெட் தேர்ச்சி சான்றிதழ் வாழ்நாள் முழுக்க செல்லத்தக்கது என்ற அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து, பிரதமருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
தற்போது 7 ஆண்டுகள் மட்டும் செல்லத்தக்கதாய் இருக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) தேர்ச்சி சான்றிதழ், இனி வாழ்நாள் முழுவதும் செல்லும் என மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஜூன் 04) பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம்:
"வணக்கம். கோவிட் - 19 தொற்றுநோய் காரணமாக, ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழை வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கதாக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில், ஏழு ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகக்கூடிய ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என்றும், 2011ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கும் பொருந்தும் வகையில் முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்றும், ஏழு ஆண்டுகள் நிறைவடைந்தவர்களுக்கு புதிதாகச் சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றும், மத்திய அரசு அறிவித்திருப்பதற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது சரியான முறையில் எடுக்கப்பட்ட திடமான நடவடிக்கை மட்டுமல்லாமல், ஏற்கெனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மிகப் பெரிய உதவிகரமாக அமையும். இந்த நடவடிக்கை ஆசிரியர் வேலை தேடுவோருக்கு கூடுதல் வேலைவாய்ப்புகளை நிச்சயம் ஏற்படுத்தித் தரும்".
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.