தமிழகத்தில் கரோனா நோயாளிகளுக்கான படுக்கை தட்டுப்பாடு பெருமளவு குறைந்துள்ளது என்றும், 30,002 படுக்கைகள் காலியாக இருப்பதாகவும், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், சோளிங்கர், வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்ததுடன் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் 120 படுக்கை வசதிகள் கொண்ட கோவிட் கேர் சென்டரை இன்று (ஜூன் 04) தொடங்கி வைத்தார். இதில், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது, செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, "தமிழக முதல்வரின் புயல் வேக நடவடிக்கை காரணமாக, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகள், அதிதீவிர சிகிச்சைப் படுக்கைகள் என, அனைத்து வகையான படுக்கைகள் என நேற்று (ஜூன் 03) இரவு வரை 30,002 படுக்கைகள் காலியாக உள்ளன. இதன்மூலம், பெரிய அளவிலான படுக்கை தட்டுப்பாடு குறைந்துள்ளது.
வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனை 350 படுக்கை வசதிகளுடன் சிறப்பாக இயங்கி வருகிறது. இங்கு கட்டமைப்பு வசதிகள் தரம் உயர்த்தித் தரப்படும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 30 மருத்துவர்கள், 68 செவிலியர்களும் படிப்படியாகப் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
கரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி அரசு மருத்துவமனைகளில் போதிய கட்டுமானப் பணிகள் இருப்பதை உறுதி செய்து வருகிறோம். கரோனா மூன்றாம் அலை வந்தாலும், அதை எதிர்கொள்ள தயார் நிலையில் தமிழக அரசாங்கம் உள்ளது" என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக ஆக்சிஜன் செறிவூட்டிகள் உதவியுடன் 250 படுக்கை வசதிகள் கொண்ட தற்காலிக கரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். அப்போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்), கதிர் ஆனந்த் (வேலூர்), சட்டப்பேரவை உறுப்பினர்கள் கார்த்திகேயன் (வேலூர்), அமலு விஜயன் (குடியாத்தம்), ஜெகன்மூர்த்தி (கே.வி.குப்பம்), மாவட்ட வருவாய் அலுவலர் (ஆட்சியர் பொறுப்பு) பார்த்தீபன், அரசு மருத்துவக் கல்லூரி டீன் செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, "வேலூர் மாவட்ட மக்கள்தொகை 15.5 லட்சமாக உள்ளது. இதில், 7 லட்சத்து 55 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இது மாநில அளவில் முதலிடமாகும். வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3-வது கரோனா அலையை எதிர்கொள்ளும் வகையில் 750 படுக்கைகளுடன் கூடிய கட்டமைப்பு தொடர்ந்து இயங்கும்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தினசரி ஆக்சிஜன் இருப்பு 230 டன்னாக இருந்தது. இது தற்போது 660 டன்னாக அதிகரித்துள்ளது. தற்போதைய தேவை அளவு 500 டன்னாக உள்ளது. செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி நிறுவனம் தொடர்பாக முதல்வர் பேசி வருகிறார். இதில், நல்ல தீர்வு கிடைக்கும்.
மத்திய அரசுடன் இணக்கமான சூழலில் தடுப்பூசி பெற்றுப் பொதுமக்களுக்குச் செலுத்துவதுதான் இப்போதைய குறிக்கோள். தமிழகத்துக்கு ஒரு கோடியே ஒரு லட்சம் தடுப்பூசி வரப்பெற்றுள்ளது. இதில், 93 லட்சத்து 75 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்க கருத்து வரப்பெற்றுள்து.
18 முதல் 44 வயதுக்குள் கிராமப்புறங்களில் முகாம் அமைக்கப்பட்டுத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 80 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது, 50 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி வரப்பெற்றுள்ளது. தடுப்பூசி வரவர மாவட்டங்களுக்குப் பிரித்து வழங்கப்படும்.
நீட் தேர்வு தொடர்பான தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவிப்பார்" என்று கூறினார்.