திண்டுக்கல், மதுரை மாவட்ட முதல்போக பாசனத்திற்காக இ.பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் வைகைஅணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தனர். 
தமிழகம்

மதுரை, திண்டுக்கல் முதல்போக பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

என்.கணேஷ்ராஜ்

திண்டுக்கல், மதுரை மாவட்ட முதல்போக பாசனத்திற்காக வைகைஅணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது.

தேனி மாவட்டம் வைகைஅணையில் இருந்து வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் மதுரை, திண்டுக்கல் மாவட்ட பிரதான கால்வாய் பாசனநிலங்களின் முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது வழக்கம்.

ஆனால் கடந்த 12 ஆண்டுகளாக ஜூனில் அணையில் போதுமான நீர் இருப்பு இல்லாததால் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தாமதமாகவே தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது வைகை அணையில் 68 அடிக்கு நீர்மட்டம் உள்ளதால், முதல்போக பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதியமைச்சர் பழனிவேல்தியாகராஜன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் ஹெச்.கிருஷ்ணன்உன்னி, எஸ்.அனீஸ்சேகர், எம்.விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விநாடிக்கு 900கனஅடி வீதம் அணையின் 7 பிரதான மதகுகள் வழியாக தண்ணீர் சீறிபாய்ந்து வெளியேறியது.

முதல்போக பாசனத்திற்காக கால்வாய் வழியாக 120 நாட்களுக்கு தண்ணீர் செல்ல உள்ளது.

இதில் முதல் 45 நாட்களுக்கு தொடர்ச்சியாகவும், அடுத்து அணைநீரின் இருப்பை பொருத்து 75 நாட்களுக்கு முறைவைத்தும் தண்ணீர் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து தற்போது திறக்கப்பட்டுள்ள நீர் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 1797 ஏக்கர், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்தில் 16,452 ஏக்கர், மதுரை மாவட்ட வடக்கு வட்டத்தில் 26,792 ஏக்கர் என மொத்தம் 45,041 ஏக்கர் பாசன வசதி பெறும்.

நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் என்.ராமகிருஷ்ணன்(கம்பம்), ஏ.மகாராஜன்(ஆண்டிபட்டி), கோ.தளபதி (மதுரை வடக்கு), கேஎஸ்.சரவணக்குமார்(பெரியகுளம்), எ.வெங்கடேசன்(சோழவந்தான்), முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், மதுரை மண்டல நீர்வள ஆதாரத்துறை தலைமைப் பொறியாளர் எம்.கிருஷ்ணன், பெரியாறு வைகை வடிநிலக்கோட்டப் பொறியாளர் வி.சுகுமாறன், பெரியாறு பிரதான கோட்ட செயற்பொறியாளர் பவளக்கண்ணன், வைகைஅணை உபகோட்ட உதவி செயற்பொறியாளர்கள் சி.செல்வம், ந.மொக்கமாயன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

12 ஆண்டுகளுக்கு பின்னர் சரியான பருவத்திற்கு முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உள்படம்: திறக்கப்பட்ட நீர் அணையின் பிரதான மதகுகள் வழியே சீறிப்பாய்ந்து வெளியேறியது.

SCROLL FOR NEXT