பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதி முத்துமனோ (27) கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து இச்சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் 6 பேர் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் மேலும் ஓர் அதிகாரி தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாளையங்கோட்டை மத்திய சிறை வளாகத்தில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகேயுள்ள வாகைகுளத்தை சேர்ந்த பாபநாசம் மகன் முத்துமனோ கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக பெருமாள்புரம் போலீஸார் 7 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர். இச் சம்பவத்தை அடுத்து முத்துமனோவின் உறவினர்கள் மற்றும் சமுதாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பாளையங்கோட்டை மத்திய சிறைமுன் 8 மணிநேரத்துக்கு மறியலில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு நடத்திய பேச்சுவார்த்தைக்குப்பின் போராட்டம் கைவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் சிறைக்குள் கொலை நடைபெற்றுள்ளதால் அப்போது பணியில் துணை சிறை அலுவலர் சிவனு, உதவி சிறை அலுவலர்கள் சங்கரசுப்பு, கங்காராஜன், ஆனந்தராஜ், முதல் தலைமை காவலர் வடிவேல் முருகையா, சிறைக்காவலர் சாம் ஆல்பர்ட் ஆகிய 6 பேர் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் உதவி சிறை அலுவலர் சண்முகசுந்தரம் 7-வது நபராக தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே கடந்த 43 நாட்களாக முத்துமனோவின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்து வருகிறார்கள். அவரது உடல் உடற்கூறு ஆய்வுகுப்பின் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கும் நடைபெற்று வருகிறது.