எடப்பாடி பழனிசாமி: கோப்புப்படம் 
தமிழகம்

கரோனா தடுப்பு நடவடிக்கை; தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்; ஈபிஎஸ் பேட்டி

செய்திப்பிரிவு

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில், தமிழக அரசு இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

''தொண்டர்கள் மன வருத்தத்தில் இருப்பது புரிகிறது. விரைவில் நிர்வாகிகளைச் சந்திப்பேன். கட்சியை மீட்டெடுக்கலாம்'' என, சசிகலா பேசியதாக, கடந்த சில நாட்களாக ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் உலா வருவது அரசியல் தளத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இந்நிலையில், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூன் 04) எதிர்க்கட்சித் தலைவரும், அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி 9 மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. அரசு பங்களாவை காலி செய்துவிட்டு, சென்னையில் புதிய இல்லத்திற்கு இன்று குடிபுகுவதால் ஓபிஎஸ் அக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், வளர்மதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் தோல்வி, எதிர்க்கட்சியாக எப்படிச் செயல்படுவது, சசிகலா ஆடியோ விவகாரம் குறித்து ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.

இக்கூட்டம் முடிந்த பின்னர், செய்தியாளர்களிடம் ஈபிஎஸ் பேசியதாவது:

"அதிமுக அரசு இருந்தபோது கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை வலியுறுத்தினேன். ஆந்திர முதல்வருடன் இதுகுறித்து பேசினேன். முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமாரை ஆந்திராவுக்கு அனுப்பி, இதுகுறித்து அம்மாநில முதல்வரிடம் பேச வைத்தேன். அப்போது, இதுகுறித்து பரிசீலிப்பதாக ஆந்திர முதல்வர் கூறினார். மேலும், தெலங்கானா முதல்வரிடமும் பேசினோம். பிரதமரை நேரில் சந்தித்து நான் இதனை வலியுறுத்தினேன்.

தமிநாடு நீர் பற்றாக்குறை உள்ள மாநிலம். டெல்டா பகுதி விவசாயிகளுக்கு நீர் கிடைக்க இதனை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினேன். இன்று மத்திய அரசின் தேசிய நீர்வள முகமை, தற்போது விரிவான திட்ட அறிக்கையை இறுதி செய்து சம்மந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே, இத்திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

தமிழகத்தில் இப்போது சராசரியாக 25 ஆயிரம் பேர் தினமும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவதாக அரசு தெரிவித்திருக்கிறது. இதுவே அதிகம். அரசு இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் 269 பரிசோதனை மையங்கள் தற்போது உள்ளன. இது போதாது. அதனை அதிகரிக்க வேண்டும். பரிசோதனையையும் அதிகரிக்க வேண்டும்.

2020, ஜூன் மாதம் 6,000-க்கு மேல் தினசரி கரோனா எண்ணிக்கை இருந்தது. அப்போது 90 ஆயிரம் பேர் வரை பரிசோதித்தோம். இப்போது 25 ஆயிரம் இருக்கிறது. 4 மடங்கு உயர்ந்திருக்கிறது. எனவே பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்.

அதிமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் கரோனா பரிசோதனை முடிவு அறிவிக்கப்பட்டது. இப்போது 3-4 நாட்கள் கழித்துத்தான் அறிவிக்கப்படுகிறது. இதனால் தொற்று ஏற்பட்டவர்கள் வெளியிடங்களுக்கு சென்று வருகிறார்கள். இதனால், நோய் தொற்று அதிகரிக்கிறது. காலதாமதம் இல்லாமல் 24 மணிநேரத்தில் முடிவுகளை அறிவிக்க வேண்டும்.

அப்போதைய அதிமுக அரசு வீடு, வீடாக சென்று நோய் அறிகுறி கண்டறியப்பட்டால், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபட்டது. அதனால், பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இப்போது அப்படி இல்லை என தெரியவருகிறது. சில இடங்களில் மட்டுமே சோதனை மேற்கொள்கின்றனர். எனவே, அரசு இதனை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

தடுப்பூசியை தமிழகத்திற்கு அதிகளவில் வழங்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். கூடுதலான தடுப்பூசிகளை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டும்".

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT