பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரும்பூஞ்சை நோய்க்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு

கே.சுரேஷ்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்புப் பூஞ்சை நோய் பாதிப்புக்கு மேலும் ஒருவர் இன்று உயிரிழந்தார்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அதிக நாட்கள் ஆக்சிஜன் சிகிச்சை அளிக்கப்படுவோர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்புப் பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படுகிறது.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 8 பேர் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 2 பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இரு தினங்களுக்கு முன்பு ஆலங்குடி அருகே வெள்ளைகொல்லையைச் சேர்ந்த ஒருவர் கருப்புப் பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு வாரமாக அதற்குரிய மருந்து கிடைக்காமல் அவதிப்பட்டு உயிரிழந்தார்.

இந்நிலையில், ஆலங்குடி அருகே குப்பக்குடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (மே 04) உயிரிழந்தார்.

இதனால், மாவட்டத்தில் கருப்புப் பூஞ்சையினால் உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கருப்புப் பூஞ்சை நோய்க்கான சிகிச்சை மையத்தை உடனே தொடங்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT