தமிழகம்

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்: முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தி, நியாயமான விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கரோனா நோயின் தாக்கம் ஒரு பக்கம் மக்களை வாட்டி வதைக்கும் சூழலில், விலைவாசி உயர்வு பொதுமக்களை விழி பிதுங்க வைத்துள்ளது.

குறிப்பாக மக்கள் அன்றாடம் சமையலுக்கு உபயோகிக்கும் அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் விலை உச்சத்தில் உள்ளன.

கரோனாவின் தாக்கம் கடந்தஆண்டு மார்ச் மாதம் முதல் இருந்தாலும், அத்தியாவசிய பொருட்களின் விலை இந்த மாதம் உச்சத்துக்கு சென்றுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, சமையல் எண்ணெய் 20 சதவீதமும், சூரியகாந்தி எண்ணெய் 56 சதவீதமும், கடுகு எண்ணெய் 42 சதவீதமும், வனஸ்பதி 42 சதவீதமும், பாமாயில் 52 சதவீதமும், பருப்பு வகைகளின் விலை 15 சதவீதமும் உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதுபோல், அரிசி, சர்க்கரை, உப்பு போன்ற பொருட்களின் விலையும் அதிகரித்து, மக்களின் மாத பட்ஜெட்டில் ரூ.500 முதல்ரூ.1,000 வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணமான கடத்தல், பதுக்கலை தடுக்கவும், மக்கள் நியாயமான விலையில் அத்தியாவசிய பொருட்களை பெறவும், தேவைப்பட்டால் விலை நிறுத்தல் நிதியத்தை ஏற்படுத்தி அதன்மூலம் மக்களுக்கு நியாயமான விலையில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றுமுதல்வரை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT