தமிழகம்

காய்ச்சலுக்கு மருத்துவர்களை அணுகுவதை தவிர்த்தனர்; திருமுல்லைவாயிலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை: அச்சம் ஏற்படுத்தும் ஊடகச் செய்திகள் காரணமா?

செய்திப்பிரிவு

திருமுல்லைவாயிலில் வசிப்பவர் வெங்கட்ராமன்(78). இவரது வீட்டு மாடிப் பகுதியில் வெங்கட்ராமனின் தங்கை மல்லிகேஸ்வரி (64), கணவர் டில்லி(74), மகள் நாகேஸ்வரி (34) ஆகியோர் வசித்தனர். சில தினங்களாக இவர்கள் 3 பேருக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் கரோனா அச்சம் காரணமாக கரோனா பரிசோதனை செய்துகொள்ளாமல் மருந்து கடையில் மருந்து வாங்கி சாப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 3 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். இதேபோன்று சில தினங்களுக்கு முன்பு திருவள்ளூரை அடுத்த கசுவா என்ற கிராமத்திலும் ஒரு முதியவர் தனது இரு மகள்களுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஊரடங்கால் ஏற்பட்ட மன அழுத்தம்,கரோனா தொற்று மரணங்கள், ஆக்சிஜன் கிடைக்காத நோயாளிகளின் அவஸ்த்தை போன்ற செய்திகளை ஊடகங்களில் பார்த்து இவர்கள் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவதை தவிர்த்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதையடுத்து தேசிய மருத்துவ இயக்ககத்தின் மருத்துவம் மற்றும் நெறிமுறை பதிவு வாரியத் தலைவர்பி.என்.கங்காதர், பெங்களூரு நிம்மான்ஸ் மன நல மருத்துவமனை தலைவர் பிரதிமா மூர்த்தி உள்ளிட்ட மனநலம் சார்ந்த வல்லுநர்கள் 4 பேர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெருந்தொற்று காலத்தில் தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் மக்கள் அச்சம் அடையக்கூடிய செய்திகளை தவிர்க்க வேண்டும். கரோனா மரணங்கள் தொடர்பாக ஊடகங்களில் வரும் செய்திகளை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒரு நோயாளியும், அவரது குடும்பத்தாரும் பார்க்கும்போது மிகுந்த துயரமடைவார்கள் என்பதை ஊடகங்கள் சிந்திக்க வேண்டும். மக்களின் மன நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில்அச்சமூட்டும் செய்தியை வெளியிடக்கூடாது என வலியுறுத்துகிறோம்.

இதுபோன்ற இக்கட்டான சூழலில் அதனை எதிர்க்க மக்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளை செய்தியாக கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT