தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுள்ள 300 படுக்கைகள் கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்கெனவே ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 1,000 படுக்கைகள் உள்ளன. இந்நிலையில், கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள 300 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தலைமைச் செயலர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், தஞ்சையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் க.அன்பழகன், துரை.சந்திரசேகரன், என்.அசோக்குமார், டி.கே.ஜி.நீலமேகம், தஞ்சை ஆட்சியர் கோவிந்தராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதன்பின், இந்த மையத்தை மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று பார்வையிட்டார். அப்போது, கரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்யும் தன்னார்வலர்களுக்கு பாதுகாப்பு கவச உடைகளை அமைச்சர் வழங்கினார். பின்னர், தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்ட ஆக்சிஜன் பொருத்தக் கூடிய 25 ஸ்ட்ரெச்சர்களை மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம் அமைச்சர் வழங்கினார்.
பின்னர், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு, 5 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். இங்கு வரும் கூட்டத்தை குறைக்கும் வகையில், கிராமப்புறங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், தலா ஒரு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி அல்லது ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுடன் படுக்கை தயார்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது என்றார்.