புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா ஊரடங்கை மீறி இயக்கப்பட்ட 3,000 வாகனங்களை கடந்த ஒரு மாதத்தில் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கரோனா தடுப்புக்காக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இதை மீறி செயல்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் இன்று (ஜூன் 03) கூறியதாவது:
"மாவட்டத்தில் கடந்த 1 மாதத்தில் 2,776 இருசக்கர வாகனம், 14 மூன்று சக்கர வாகனம், 35 நான்கு சக்கர வாகனம் உட்பட 3,004 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சாராயம் காய்ச்சியது, மதுபானம் விற்பனை செய்தது தொடர்பாக 404 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சூதாட்டத்தில் ஈடுபட்ட 325 பேர் கைது செய்யப்பட்டதோடு, ரூ.3.34 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
முகக்கவசம் அணியாத 23,016 பேரிடம் இருந்து ரூ.46 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்காத 1,069 பேரிடம் இருந்து ரூ.5.34 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அனுமதியின்றி மணல் அள்ளியது குறித்து 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதோடு, 36 மாட்டுவண்டிகள், 17 டிராக்டர்கள், 11 லாரிகள் உட்பட 75 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விதிகளை மீறுவோர் மது இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும்".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.