கார்ப்ரேட் ஆதரவு கொள்கைகளால் குடிமக்களின் சொற்ப வருமானத்தையும் வழிப்பறி செய்து, பன்னாட்டு கார்ப்ரேட் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதை ஒன்றிய அரசு மௌன சாட்சியாக நின்று வேடிக்கை பார்க்கிறது என விமர்சனம் செய்துள்ள முத்தரசன் ஜூன் 8 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
கரோனா நோய்த் தொற்றுப் பரவலை தடுக்கும் சுமை முழுவதையும் மாநில அரசுகள் தலையில் சுமத்தி வரும் பாஜக ஒன்றிய அரசு தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது. தமிழகத்தை விட சிறிய மாநிலங்களுக்கு அதிகமாகவும், அந்த மாநிலங்களை விட பெரும் எண்ணிக்கை மக்கள் தொகையும், நோய்த் தொற்று பாதிப்பும் அதிகம் உள்ள தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு மிகக் குறைந்த அளவில் தடுப்பு மருந்துகளை மட்டுமே அனுப்பி தமிழகத்தை வஞ்சித்துள்ளது.
கடந்த மே மாதம் வழங்குவதாக ஒப்புக் கொண்ட தடுப்பூசி மருந்து எண்ணிக்கையில் இன்னும் 1.8 லட்சம் தடுப்பூசி மருந்துகள் அனுப்பாமல் பாக்கி வைத்துள்ளது. இந்த மாதம் ஒதுக்கீடு செய்துள்ள தடுப்பூசி மருந்துகளை பல தவணைகளில் தான் வழங்க முடியும் என கூறியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் பணிகள் தடைப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை ஆரம்ப நிலையிலேயே தமிழ்நாடு கடுமையாக எதிர்த்தது. இதன் காரணமாக ஜிஎஸ்டி வரி விதிப்பால் தமிழகத்திற்கு ஏற்படும் நிதியிழப்பை ஒன்றிய அரசு ஐந்தாண்டு காலத்திற்கு இழப்பீடு வழங்கி ஈடுகட்டும் என உறுதியளித்தது. ஆனால் இந்த வாக்குறுதி பாஜக ஒன்றிய அரசு நடந்து கொள்ளவில்லை.
இயற்கை பேரிடர், கரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு தமிழகம் கேட்ட பேரிடர் கால நிதியினையும் முழுமையாக வழங்க வில்லை. இதன் காரணமாக தமிழகத்தின் நிதி நெருக்கடியை மேலும் தீவிரமாக்கும் எதிர்மறைப் போக்கை ஒன்றிய அரசு கடைபிடித்து வருகிறது.
கடந்த மாதம் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசின் நிதியமைச்சர் முன்வைத்துள்ள ஆக்கபூர்வமான முன்மொழிவுகள் ஏற்கப்பட வேண்டும். தடுப்பூசி மருந்துகளுக்கும், கரோனா தடுப்பு மருந்துகளுக்கும் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்களிக்க வேண்டும்.
கடந்த மே மாதத்தில் மட்டும் 16 முறை பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது. கரோனா நோய்த் தொற்று பரவல் நெருக்கடி தொடரும் நிலையில், கடந்த 15 மாதங்களில் மட்டும் பெட்ரோல், டீசல், வரி உயர்வுகள் மூலம் ரூ.2 லட்சத்து 95 ஆயிரம் கோடி நிதிச்சுமை மக்கள் தலையில் ஏற்றப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 175 அமெரிக்க டாலராக விற்கப்பட்ட போது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஒன்றிய அரசு பெட்ரோல் லிட்டர் ரூ.66க்கு விற்பனை செய்தது. ஆனால் இன்று சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 19.5 அமெரிக்க டாலராக வீழ்ச்சி அடைந்திருக்கும் போது, பாஜக ஒன்றிய அரசு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டி விற்கப்படுகிறது. இது மேலும் உயரும் அபாயம் தொடர்கிறது.
கார்ப்ரேட் ஆதரவு கொள்கைகளால் குடிமக்களின் சொற்ப வருமானத்தையும் வழிப்பறி செய்து, பன்னாட்டு கார்ப்ரேட் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதை ஒன்றிய அரசு மௌன சாட்சியாக நின்று வேடிக்கை பார்க்கிறது.
ஆர்எஸ்எஸ் வழி நடத்தும் பாஜக ஒன்றிய அரசின் வஞ்சகப் போக்கை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக் கண்டிக்கிறது. கீழ்க்கண்ட கோரிக்கைகளை ஏற்று செயல்படுத்துமாறு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.
* தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசிடம் கேட்டுள்ள தடுப்பூசி மருத்துகள் எண்ணிக்கையை முழுமையாக மாதம் தோறும் வழங்க வேண்டும்.
* செங்கல்பட்டு, இந்துஸ்தான் (எச்எல்எல்) பயோடெக் ஒருங்கிணைந்த தடுப்பு மருந்துகள் உற்பத்தி வளாகத்தையும், அது தொடர்பான சொத்துக்களையும் தாமதமின்றி தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.
* ஜிஎஸ்டி வரிவிதிப்பு இழப்பீட்டு தொகை உட்பட தமிழகத்திற்கு தர வேண்டிய நிதி முழுவதையும் உடனடியாக வழங்க வேண்டும்.
* பெட்ரோல், டீசல் விலைகளை முறையே ரூ.50 மற்றும் ரூ.40 என வழங்கும் வகையில் ஒன்றிய அரசின் வரிகள் குறைக்கப்பட வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் வஞ்சகப் போக்கை கண்டித்தும் வரும் ஜூன் 08 செவ்வாய்க் கிழமை காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
கரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடக்கைகளை அனுசரித்தும், ஊரடங்கு நடைமுறைகளை பின்பற்றியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். மக்கள் நலனையும், மாநில உரிமைகளையும் வலியுறுத்தி நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பேராதரவு வழங்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்”.
இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.