கோப்புப்படம் 
தமிழகம்

கரோனா பரிசோதனையில் தவறான முடிவு: மனஉளைச்சலில் தவிக்கும் அரசு ஊழியர்கள்

செய்திப்பிரிவு

ஒரே நேரத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அனைவருக்கும் கரோனா தொற்று இருப்பதாக வெளியான தவறான பரிசோதனை முடிவால் அரசு ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த மடத்துக்குளம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்தாலுகா அலுவலகம், பேரூராட்சிஅலுவலகம் ஆகியவற்றில் பணிபுரிவோருக்கு, சுகாதாரத்துறை சார்பாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

தாலுகா அலுவலகத்தில் 15 பேரும், பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள் 35 பேரும் இதில் கலந்து கொண்டனர். சில தினங்கள் கழித்து அறிக்கை வெளியானது. அதில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அனைவருக்குமே கரோனா ‘பாசிட்டிவ்’ என தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன.

பரிசோதனை மேற்கொள்ளப் பட்ட அனைவரும் ஆரோக்கியமாக உள்ள நிலையில் ஆய்வு முடிவு குறித்தும், அனைவருக்கும் ஒரே நேரத்தில் தொற்று உறுதி எனமுடிவு தெரிவிக்கப்பட்டது குறித்தும் ஊழியர்களிடையே குழப்பமும், சந்தேகமும் ஏற்பட்டது. ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

இந்நிலையில், ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்ட பரிசோதனை முடிவுகள் அனைத்தும் தவறு என தெரிய வந்தது. பரிசோதனைக் கூடத்தின் அறிக்கையில் நடந்த குளறுபடியால் இந்த தவறு நிகழ்ந்துள்ளது என்பது தெரிய வந்தது. இதனால் அனைவரும் நிம்மதி அடைந்ததோடு, வழக்கம் போல அவரவர் பணிக்கு திரும்பினர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஊழியர்கள் கூறும்போது, ’கடந்தசில நாட்களுக்கு முன் சளி மாதிரி எடுக்கப்பட்டு, முடிவுகளும் தெரிவிக்கப்பட்டது.

அனைவருக்கும் ‘பாசிடிவ்’ என தெரிவிக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தோம். அலுவலகங்கள் மூடப்பட்டன. இத் தகவல் காட்டுத் தீ போல் மக்களிடையே பரவியது. அதனால் பொதுமக்களும் பீதிக்குள்ளாகினர்.

இந்நிலையில் சுகாதாரத் துறையால் நேர்ந்த சிறு தவறினால் இது நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதனால் நிம்மதி ஏற்பட்டது. எனினும் தனிமைப்படுத்தப்பட்ட நாட்களில் கடும் மன உளைச்சல் ஏற்பட்டது’ என்றனர்.

கரோனா பெருந்தொற்று காலத்தில் சுகாதாரத்துறையினரின் பணி பாராட்டுக்குரியதாக உள்ளது. எனினும் இதுபோன்ற நிகழ்வுகளால் மனரீதியாக மக்கள் பாதிக்கப்படுவதை உணர்ந்து செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT