கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை வீட்டுக்கே வந்து இலவசமாக வழங்கும் `O2 ஃபார் இந்தியா’ சேவை சென்னையில் ஓலா அறக்கட்டளை சார்பில் நேற்று தொடங்கப்பட்டது.
இதுகுறித்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு ஆக்சிஜன் செறிவூட்டி தேவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவர்கள் ஓலா செயலி மூலம் தங்களின் தேவை குறித்த கோரிக்கையை சமர்ப்பித்து, சில அடிப்படை விவரங்களை குறிப்பிட வேண்டும்.
தேவையான விவரங்களைச் சமர்ப்பித்தபின், ஓலா வாகனங்கள் மூலம், பிரத்யேக பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களால் ஆக்சிஜன் செறிவூட்டி கருவியை இலவசமாக வீட்டுக்கே வந்து வழங்க ஏற்பாடு செய்யப்படும். நோயாளி குணமடைந்து, இனி ஆக்சிஜன் செறிவூட்டி தேவையில்லை என்ற நிலையை எட்டினால், அந்த கருவியை மீண்டும் எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளையும் ஓலா இலவசமாக மேற்கொள்ளும். பின்னர் அந்த கருவி அடுத்த நோயாளி பயன்படுத்துவதற்கு தயாராக வைக்கப்படும்.
சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் முன்னிலையில் இந்த சேவை தொடங்கி வைக்கப்பட்டது. முதல்கட்டமாக இதற்காக 500 ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ‘O2 ஃபார் இந்தியா’ சேவைக்காக ஓலா ஃபவுண்டேஷன் அமைப்பு ‘கிவ் இந்தியா’ அமைப்புடன் இணைந்து செயல்படுகிறது.
இதுகுறித்து ஓலா நிறுவன தலைமை செயல்பாட்டு அதிகாரி கவுரவ் போர்வல் கூறும்போது, “பெருந்தொற்று பரவலின்போது சமூக நல்வாழ்வுக்கான முயற்சிகளில் பங்களிப்பை வழங்குவதில் ஓலா உறுதியுடனும், அர்ப்பணிப்புடனும் செயல்பட்டு வருகிறது. இந்த முயற்சியால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் நோயாளிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்றார்.