தமிழகம்

பொட்டு சுரேஷ் கொலையில் குற்றப்பத்திரிகை தாக்கல்: திமுக நிர்வாகிகள் உட்பட 120 சாட்சிகள்

எஸ்.ஸ்ரீனிவாசகன்

பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் 1000 பக்கங்கள் அடங்கிய குற்றப் பத்திரிகையை நேற்று நீதிமன் றத்தில் சிபிசிஐடி போலீஸார் தாக்கல் செய்தனர். இதில் கொலைக்கான பின்னணி குறித்து விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ். முன்னாள் மத்திய அமைச் சர் மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பரான இவரை கடந்த 2013 ஜன. 31-ல் ஒரு கும்பல் மதுரை டிவிஎஸ் நகர் அருகே கொலை செய்தது. இவ்வழக்கில் மதுரை வேளாண் விற்பனைக்குழு முன் னாள் தலைவர் அட்டாக் பாண்டி உட்பட 18 பேரை சுப்பிரமணியபுரம் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு கடந்த நவம்பரில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. மதுரை சிபிசிஐடி டிஎஸ்பி மன்மத பாண்டியன் தலைமையில் 6 ஆய் வாளர்கள் கொண்ட தனிப்படை யினர் வழக்கை மீண்டும் விசாரித் தனர்.

20 நாட்கள் விசாரணை

சிபிசிஐடி எஸ்பி அமித்குமார் சிங் நேரடி கண்காணிப்பில் 20 நாட்களில் விசாரணை முடித்த போலீஸார் குற்றப்பத்திரிகையை தயார் செய்தனர். டிஎஸ்பி மன்மத பாண்டியன், ஆய்வாளர்கள் மணி மாறன், பெத்துராஜ் ஆகியோர் நேற்று காலை மதுரை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எண் 4-ல் நீதிபதி (பொறுப்பு) தனஞ்செயனிடம் குற் றப்பத்திரிகையை தாக்கல் செய் தனர்.

கொலை நடந்த விவரம், இதன் பின்னணி, குற்றவாளிகள், சதித் திட்டம் குறித்த முக்கிய தகவல் கள் 50 பக்கங்களில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. பொட்டு சுரேஷ் மனைவி, மதுரை திமுக பிரமுகர் கள் எஸ்ஸார் கோபி, பி.எம்.மன்னன், திமுக மாவட்டச் செய லர்கள் மூர்த்தி, தளபதி, வி.கே.குருசாமி, கிரானைட் குவாரி அதிபர்கள், தனியார் ஹோட்டல் ஊழியர்கள் உட்பட 120 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் அளித்த சாட்சியம், வங்கி பணப்பரிமாற்றம், சதித்திட்டம் தீட்ட பயன்படுத்திய ஹோட்டல் அறையில் தங்கியதற்கான ரசீது, செல்போன் தொடர்புகள் குறித்த ஆதாரங்கள் என 100-க்கும் மேற் பட்ட முக்கிய ஆவணங்கள் உட்பட சுமார் 1000 பக்கங்கள் குற்றப்பத்திரிகையில் இணைக் கப்பட்டுள்ளன.

கொலைக்கான காரணம்

பாளையங்கோட்டை சிறையில் வைத்து விசாரித்தபோது கொலைக் கான காரணம் குறித்து அட்டாக் பாண்டி விரிவாகத் தெரிவித்துள் ளார். இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் கூறியது: பொட்டு சுரேஷ் உத்தரவின்பேரிலேயே வேளாண் விற்பனைக் குழு தலைவர் பதவி பறிக்கப்பட்டது. மேலும் நிதி நிறுவன அதிபர் கடத்தலில் தன் மீது வழக்கு பதிய ஏற்பாடு செய்தது, திமுகவிலும், மு.க.அழகிரி குடும்பத்தினரிடமும் செல்வாக்கை திட்டமிட்டு குறைத்தது, தனக்கிருந்த பழைய செல்வாக்கைப் பயன்படுத்தி போலீஸ் மூலம் என்கவுன்ட்டர் செய்யும் அளவுக்கு நெருக்கடி அளித்து தனது செயல்பாடு, வருமானத்தை பொட்டு சுரேஷ் முடக்கினார். தனது உறவினரை வைத்து தன்னை தீர்த்துக்கட்ட ஏற்பாடு செய்யும் அளவுக்கு பொட்டு சுரேஷ் சென்றதால் கூட்டாளிகள் மூலம் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். கொலை சதி குறித்து குற்றப் பத்திரிகையில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

சிபிசிஐடி செய்தது என்ன?

அட்டாக் பாண்டியின் பின்னணியில் முக்கிய பிரமுகர்கள் யாரும் இருக்கலாமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப் பட்டது. விசாரணை நடந்தபோதே, அழகிரி மகன் துரை தயாநிதியின் நெருங்கிய நண்பர் ராம்கியை கொல்ல முயற்சி நடந்தது. இதில் அட்டாக் பாண்டி கூட்டாளிகள் கைதாகினர். இவர்களிடமும் சிபிசிஐடி விசாரித்தது.

ஆனாலும், ஏற்கெனவே பொட்டு சுரேஷ் கொலை வழக்கின் விசாரணை எந்த கோணத்தில் சென்றதோ, அந்த அடிப்படையிலேயே வழக்கை முடித்துள்ளனர்.

சாட்சிகளிடம் மறுவிசாரணை நடத்தி புதிய வாக்குமூலம் பெறப்பட்டது. ஏராளமான புதிய சாட்சி ஆவணங்கள் சேகரிக் கப்பட்டுள்ளன.

அட்டாக் பாண்டி கைதாகி வரும் 20-ம் தேதியுடன் 90 நாட்கள் முடிவதால், ஜாமீன் கிடைப்பதை தடுக்கும் நோக்கிலேயே விரை வாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ததாகவும் போலீஸார் தெரி வித்தனர். குற்றப்பத்திரிகையை ஏற்பதாக நீதிபதி அறிவித்த பின்னரே உரியவர்களுக்கு நகல் வழங்கப்படும்.

SCROLL FOR NEXT