‘கண்டா வரச்சொல்லுங்க… கர்ணன கையோட கூட்டி வாருங்க… அவன கண்டா வரச்சொல்லுங்க… என தேனி சாலைகளில் சினிமா பாடல் மெட்டில் கரோனா விழிப்புணர்வு கருத்துகளைப் பாடி வாகன ஓட்டுநர்களின் கவனம் ஈர்த்து வருகிறார் காவலர் ஒருவர்.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே க.விலக்கு காவல் நிலையம் உள்ளது. இங்கு தலைமைக் காவலராக இருப்பவர் மணிகண்டன். இவர் மதுரை - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் க.விலக்கு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
அப்போது கர்ணன் திரைப்பட பாடல் மெட்டில் கரோனா விழிப்புணர்வு கருத்துகளை பாடி, வாகன ஓட்டுநர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். சக காவலர்கள் வாடிப்பட்டி மேளத்துடன் இவர் பாடும் கரோனா விழிப்புணர்வு வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. முகக் கவசம், சமூக இடைவெளி, வீட்டிலேயே இருத்தல் போன்ற அவசியமான கருத்துகளை சினிமா பாடல் மெட்டில் பாடும் காவலரின் முயற்சி பொதுமக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.