மேற்கு அண்ணா நகர் பகுதியில் வெள்ள நிவாரண உதவி செய்ய வந்தவர்களை அதிமுகவினர் தாக்கினர்.
சென்னை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 'வாட்ஸ் அப்' குரூப் நண்பர்கள் இணைந்து கீழ்ப்பாக்கம் வாட்டர் டேங்க் அருகே கங்கை அம்மன் கோயில் தெருவில் சமையல் செய்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் விநியோகம் செய்து வருகின்றனர். இதில் பெங்களூரில் இருந்து 10-க்கும் மேற்பட்டவர்கள் வந்து சென்னை நண்பர்களுடன் இணைந்து நிவாரணப் பணிகளை செய்து வருகின்றனர். கடந்த 4 நாட்களில் இவர்கள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியுள்ளனர். இவர்களின் சேவையை அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டினர்.
இந்நிலையில் அதிமுகவின் 102-வது வட்டச் செயலாளர் தமிழ்ச்செல்வன், அவரது கார் ஓட்டுநர் ராஜா மற்றும் சிலர் நேற்று முன்தினம் அந்த பகுதிக்கு வந்து சமையல் செய்து கொண்டிருந்த தன்னார்வலர்களிடம் தங்களுக்கு 2 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் தயார் செய்து கொடுக்கும்படி கேட்டதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் கெட்ட வார்த்தைகளாலும், மோசமான சைகைகளாலும் தவறாக நடந்து கொண்டதாகவும் தெரிகிறது.
பிறகு தன்னார்வலர்கள் தாங்கள் தயார் செய்த உணவுப் பொட்டலங்களை பொது மக்களுக்கு விநியோகம் செய்துகொண்டிருந்தபோது அதிமுக வட்டச் செயலாளர் தமிழ்ச்செல்வனுடன் வந்தவர்கள் தன்னார்வலர்களை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘‘உதவி செய்ய வந்தவர்களிடம் அதிமுகவினர் மோசமாக நடந்துகொண்டனர். அவர்களும் உதவி செய்ய மாட்டார்கள், உதவி செய்ய வருபவர்களையும் விடமாட்டார்கள்’’ என்றனர்.
"உதவி செய்ய வந்த இடத்தில் இப்படி அடி வாங்குவோம் என்று நினைக்கவில்லை. கட்சிக்காரர்கள் நடந்துகொண்ட விதம் வருத்தம் அளிக்கிறது. போலீஸில் புகார் கொடுக்க விரும்பவில்லை. நாங்கள் எங்கள் சொந்த ஊருக்கு செல்கிறோம்" என்று தன்னார்வலர்கள் சோகத்துடன் கூறினர்.