தமிழக கோயில் சொத்துக் கணக்கு, வழக்குகளை வெளிப்புற தணிக்கைக்கு உட்படுத்தக் கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கோவை ஈஷா யோகா மையத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் வாசுதேவ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும், அசையா சொத்துக்கள் உள்ளன. இருப்பினும் பல கோவில்களில் ஒரு கால பூஜை கூட நடைபெறுவதில்லை.
சில கோவில்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை வருமானம் வருகிறது. 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களில் ரூ.10 ஆயிரத்துக்கு கீழ் வருமானம் வருகிறது. இதனால் அனைத்து கோயில்களின் சொத்துக்கள் மற்றும் வருமானத்தை தணிக்கை செய்ய வேண்டும்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி அறநிலையத்துறைக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 44 ஆயிரம் கோவில்களின் சொத்துக்கள், வருமானத்தை வெளிப்புற தணிக்கைக்கு உட்படுத்தவும், தமிழக அறநிலையத்துறை கோவில்களை மேம்படுத்துவது குறித்து ஆராய உயர்மட்ட ஆணையம் அமைக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வீரகதிரவன் வாதிடுகையில், மனுதாரர் அரசிடம் ஏப்ரல் 20-ல் மனு அளித்துள்ளார். 26-ம் தேதி வழக்கு தொடர்ந்துள்ளார்.
மனுதாரரின் மனுவை அரசு பரிசீலிப்பதற்கு முன்பே நீதிமன்றம் வந்துள்ளார். விளம்பரம் பெறும் நோக்கத்தில் மனுதாரர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார் என்றார்.
இதையடுத்து, தமிழகம் பெருந்தொற்று காலத்தில் உள்ளது. இதனால் நீதிமன்றத்தில் தற்போது அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படுகின்றன.
இந்த மனு அவசரமாக விசாரிக்க வேண்டிய மனு அல்ல. இந்த வழக்கு தற்போதைய சூழலில் விசாரித்து தீர்வுகாண வேண்டிய அவசர வழக்கு இல்லை. கரோனா ஊரடங்கு முடிந்த பிறகு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று கூறி விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.