ராமேசுவரத்தில் ஊரடங்கின்போது தேவையின்றி வெளியே சுற்றித் திரிந்தவர்களுக்கு, காவல்துறை மற்றும் சுகாதாரத் துறை சார்பில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த 9 பேரும் தவறான முகவரி மற்றும் தொலைபேசி எண்களைக் கொடுத்தால் அவர்களை காவல் மற்றும், சுகாதாரத் துறையினர் தேடி வருகின்றனர்.
கரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு விதிக்கப்பட்டும்,மக்களின் ராமேசுவரத்தில் நடமாட்டம் குறைந்தபாடில்லை. தொடர்ச்சியாக பல்வேறு தேவைகளுக்காக பொதுமக்கள் நடமாட்டம் இருந்து வருகிறது.
இந்நிலையில், இ-பதிவு இன்றியும், அத்தியாவசியத் தேவைகள் இன்றியும் வெளியே சுற்றித் திரிபவர்களைக் கண்காணிக்கும் வகையில், ஆங்காங்கே ராமேசுவரத்தில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, ராமேசுவரம் திட்டக்குடி சந்திப்புப் பகுதியில் தெற்கு திங்கட்கிழமை கண்காணிப்புப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சுகாதாரத் துறையினருடன் இணைந்து இ-பதிவு இன்றியும், அத்தியாவசியத் தேவைகள் இன்றியும் வெளியே சுற்றித் திரிந்த 83 பேர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யபட்டு பரிசோதனை முடிவுகள் தெரிவிக்க அவர்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்களும் சுகாதாரத்துறையினர் சார்பில் பெறப்பட்டிருந்தன.
இந்நிலையில் புதன்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொண்ட 83 பேரில் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த 9 பேரும் தவறான முகவரி, தொலைபேசி எண்களையும் கொடுத்திருந்ததால் இந்த கரோனா தொற்றாளர்களை சுகாதாரத்துறையினர் தேடி வருகின்றனர்.