மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் தீவிபத்து ஏற்பட்டது. இரு தீயணைப்பு வண்டிகளில் வந்த வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களின் சபரிமலை என போற்றப்படும் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிகின்றனர்.
தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இக்கோயிலில் தற்போது கரோனா ஊரடங்கு என்பதால் ஆகம முறைப்படி பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தன. பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இக்கோயிலின் பிற பகுதிகளின் நவீன கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் சன்னிதானம், மற்றும் சுவாமி விக்ரகங்கள் அமைந்துள்ள பகுதிகள் ஓட்டு கூரையினாலே பழமை மறாமல் அமைக்கப்பட்டுள்ளது. இதைப்போல் சன்னிதானத்தில் மின்வசதி இன்றி எண்ணெய் விளக்கு, மற்றும் தீபங்களால் மட்டுமே ஒளிஅலங்காரம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் ஓட்டு கூரையிலான சன்னதியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. சன்னிதான பகுதியில் இருந்து எழுந்த புகைமூட்டத்தால் அப்பகுதியில் நின்ற மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர்தான் தீவிபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. சன்னிதான ஓட்டுக்கூரை பகுதி முழுவதும் புகைமூட்டத்துடன் எரியதுவங்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்த குளச்சல் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜீவன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் வளாகத்திற்கு காலை 7 மணியளவில் வந்தனர். இதைப்போல் தக்கலை தீயணைமப்பு நிலையத்தில் இருந்தும் தீயணைப்பு வாகனத்தில் வீரர்கள் வந்தனர்.
இரு தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைக்கும் பணி நடைபெற்றது. ஓட்டு கூரை என்பதால் தீ வேகமாக பரவுவதை தடுக்கும் வகையில் மேற்கூரையில் ஏறிய தீயணைப்பு வீரர்கள் ஓடுகளை அகற்றி தண்ணீரை அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து அங்கு திரண்ட பக்தர்களும் தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். கோயிலின் பிற பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுத்து ஒரு மணி நேரத்திற்குள் முழுமையாக அணைக்கப்பட்டது. இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
கோயில் சன்னதியில் விபத்தில் சிக்கிய விளக்குகள், பூஜை பொருட்கள், அம்மனுக்கு அலங்கார வளைவு போன்றவை பாதுகாப்பாக மீட்கப்பட்டு கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டன.
தகவல் அறிந்த குளச்சல் ஏ.எஸ்.பி. விஸ்வேஷ் சாஸ்திரி தலைமையில் போலீஸார் மண்டைக்காடு கோயிலுக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், விஜயகுமார் எம்.பி. மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ், மற்றும் திரளானோர் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலுக்கு வந்து தீ பிடித்த சன்னிதான பகுதியைப் பார்வையிட்டனர்.
மேலும் தீவிபத்தால் சேதமடைந்த பகுதிகளை சீரமைப்பது குறித்தும், தீவிபத்திற்கான உண்மை காரணம் குறித்தும் கண்டறிந்து வருங்காலத்தில் அவை நிகழாமல் தடுக்கும் வகையிலும் ஆலோசனை மேற்கொண்டனர்.
முதலில் மின்கசிவால் விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சன்னிதானத்தில் மின் வசதியே இல்லாத நிலையில் அதற்கான வாய்ப்பில்லை. கோயிலில் பூஜை செய்து ஒளியேற்றி வைத்த விளக்கு சரிந்து அருகே வைத்திருந்த பட்டுதுணிகளில் விழுந்து தீபிடித்திருக்கலாம் என விசாரணையின்போது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மண்டைக்காடு கோயிலில் ஏற்பட்ட தீவிபத்தால் பக்தர்கள் மத்தியில் பரபரப்பு நிலவியது.
அலட்சியமே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!
மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்து கோயில் நிர்வாகத்தன் அலட்சியமே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு விடுத்தனர்.
மேலும் முறையாக கோயில் நிர்வாகத்தை இந்து சமய அறநிலையத்துறையினர் கையாளவில்லை எனக்கூறி பக்தர்கள் சங்கத்தினர் மண்டைக்காடு கோயில் வளாகத்தில் இன்று போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. அவர்களை போலீஸார் சமரசம் செய்தனர்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் விடுத்துள்ள அறிக்கையில்; மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் ஏற்பட்ட தீவிபத்து முழுக்க முழுக்க ஆலய நிர்வாக கவனக்குறைவால் ஏற்பட்ட சம்பவம். இந்த சம்பவத்திற்கு காரணமான நிர்வாகத்தையும், பூசாரிகளையும் முறையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். கேரள தந்திரிகளை வைத்து தெய்வ பரசன்னம் பார்த்து அதன் அடிப்படையில் அடுத்தகட்ட பூஜை விசயங்களை முடிவு செய்யவேண்டும். ஆலயத்தை பழமை மாறாமல் மீண்டும் அதே தன்மையோடு புனரமைக்க ணேவ்டும் என தெரிவித்துள்ளார்.
விஸ்வ இந்து பரிஷத் மாநில இணை செயலாளர் காளியப்பன் கூறுகையில்; மண்டைக்காாடு கோயில் தீவிபத்திற்குள்ளாகி இருப்பது, இந்து அறநிலையத்துறை கோயிலை பாதுகாக்க தவறிவிட்டதை காட்டுகிறது. இதனால் பக்தர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இதுபோன்ற ஒரு நிகழ்வு கன்னியாகுமரி மாவட்டத்தில் பிற கோயில்களுக்கு வரக்கூடாது. கோயில் பாதுகாப்பில் இந்து அறநிலையத்துறை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்கள். கோயிலை பாதுகாக்க முடியவில்லை என்றால் ஆன்மீக சிந்தனை உள்ள பக்தர்கள் வசம் அரசு கோயிலை ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.