தமிழகத்தில் கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் குறித்த கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருவதாக தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தூத்துக்குடி மற்றும் அடைக்கலாபுரத்தில் நான்கு இடங்களில் குழந்தைகளுக்கான கரோனா பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி ஆறுமுகசாமி அன்பு ஆசிரமத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான கரோனா பாதுகாப்பு மையத்தை தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு கரோனா பாதுகாப்பு மையங்களை அமைக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் நான்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்களில் கரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகள் தங்கி சிகிச்சை பெற தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 361 குழந்தைகள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆங்காங்கே பெற்றோருடன் அல்லது பாதுகாவலர்களுடன் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை கரோனா பாதுகாப்பு மையங்களுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளோம்.
அவர்கள் அங்கேயே தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் கரோனா பாதுகாப்பு மையங்களுக்கு சிகிச்சைக்கு வந்தால் அவர்களுடன் தாயும் உடன் இருந்து கொள்ளலாம்.
கரோனாவால் தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு உதவித் தொகையை முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சமும், ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சமும் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும். மேலும், மாதம் ரூ.3000 வழங்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்த 72 குழந்தைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதுபோல தமிழகம் முழுவதும் வருவாய் துறையினர் மூலம் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பொதுமக்களும் விண்ணப்பிக்கலாம். அந்தந்த வட்டாட்சியர், கோட்டாட்சியர், ஆட்சியர்களிடம் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கும் முதல்வர் அறிவித்த நிவாரண உதவித் தொகை வழங்கப்படும்.
தமிழகத்தில் 2006 முதல் 2011 வரையிலான காலத்தை விட கடந்த 10 ஆண்டுகளாக குழந்தை திருமணங்கள் அதிகரித்து உள்ளன. குழந்தை திருமணங்களை தடுப்பதற்காக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக ஊராட்சி தலைவர், கிராம நிர்வாக அலுவலர், ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு பெண் ஆகியோரை கொண்ட ஊராட்சி அளவிலான குழு அமைக்கப்படவுள்ளது. மேலும், குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தவும், குழந்தை திருமணங்களை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் காவல்துறையில் உள்ள அதற்கான தனி பிரிவை மேலும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அமைச்சர்.
முன்னதாக தூத்துக்குடியில் வீட்டின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் காயமடைந்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுந்தர் என்ற இளைஞரை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், திமுக சார்பில் அவரது குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் வழங்கினார். இந்த விபத்தில் சுந்தரின் சகோதரி உயிரிழந்துவிட்டார் என்பது குறிப்பிடதக்கது.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டிவிஎஸ் சீனிவாசன் அறக்கட்டளை சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பில் 50 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அறக்கட்டளை நிர்வாகிகள் சாமிநாதன், விஜயகுமார் ஆகியோர் அமைச்சர் கீதாஜீவனிடம் நேரில் வழங்கினர்.
நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா, தூத்துக்குடி வட்டாட்சியர் ஜஸ்டின் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.